ஏழு பேர் விடுதலை: ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை!

பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரை முன் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வதென தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பிரிவு 161ஐப் பயன்படுத்தி ஏழு பேரையும் விடுவிக்க மாநில அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என தெரிவித்து இருந்தது.

இதை அடுத்து 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை மாலை 4 மணி அளவில் கூடியது. 2 மணி நேரமாக நடைபெற்ற கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்வதென முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானமானது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. தீர்மானத்திற்கு சட்டப்படி ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தியும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரைச் சூட்டக் கோரியும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related posts

Leave a Comment

twenty − 12 =