நடிகரும், எம் எல் ஏ.வுமான கருணாஸ் புழல் சிறையில் அடைப்பு!

தமிழக முதல்வர் எடப்பாடியாரையும் , காவல்துறையினரையும்  அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸை காவல் துறையினர் இன்று கைது செய்தனர். அவருக்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், முதல்வர் மற்றும் காவல் துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவர் மீது நுங்கம்பாக்கம் காவல் துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.அவரை கைது செய்ய 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. பேச்சு குறித்து விளக்கம் அளித்திருந்த கருணாஸ், தான் தலைமறைவாகவில்லை என்றும், வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் சென்னை சாலி கிராமத்திலுள்ள கருணாஸின் இல்லத்துக்கு வந்த காவல் துறையினர், அவரைக் கைது செய்தனர். இதுகுறித்து தனது இல்லத்தின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், “சட்டமன்ற உறுப்பினரான என்னை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி வேண்டும். ஆனால், என்னைக் கைது செய்ய சபாநாயகரிடம் காவல்துறை அனுமதி பெற்றதா எனத் தெரியவில்லை.307வது பிரிவில் வழக்குப் பதிவு செய்யும் அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. சட்டத்தை நாங்கள் மதிப்பவர்கள். வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

கருணாஸை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர், 3 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர். காவல் நிலையத்துக்கு வெளியே கருணாஸின் ஆதரவாளர்கள், அவரை விடுவிக்க வேண்டுமெனவும் காவல் துறைக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். விசாரணை முடிந்த பிறகு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கருணாஸுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் எழும்பூர் 13ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கருணாஸை வரும் அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, அவர் மீது போடப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கையும் ரத்து செய்தார்.இதனைத் தொடர்ந்து கருணாஸ், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

“கருணாஸ் கைது குறித்து சபாநாயகரிடம் தெரிவித்ததாக நீதிபதியிடம் காவல் துறையினர் கூறினர். நாளை காலை 10 மணிக்கு கருணாஸுக்கு ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்படும்” என்று கருணாஸின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கருணாஸ் கைதின்போது நடந்தது என்ன?

கருணாஸை வெள்ளிக் கிழமையே கைது செய்வதற்குக் காவல் துறையினர் தயாராக இருந்தார்களாம். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தென்மாவட்டங்களில் வெள்ளி, சனி இரண்டு நாட்கள் நிகழ்ச்சிகள் இருந்ததால், கருணாஸ் கைது தள்ளிபோனதாக சென்னை ஆணையர் அலுவலக அதிகாரிகள் சொல்கிறார்கள்.

நேற்று இரவு முதல் கருணாஸின் ஒவ்வொரு அசைவுகளையும் முழுமையாகக் கண்காணித்து வந்தனர் நுங்கம்பாக்கம் காவல் துறையினர். தி.நகர் உதவி ஆணையர் அரவிந்தன் தனது லிமிட்டில் உள்ள காவல் நிலையத்திலிருந்து தலா இரண்டு போலீஸ் ஒரு எஸ். ஐ, மற்றும் ஏ.ஆர்.போலீஸ் 50 பேர் என சுமார் 75பேரை வடபழனிக்கு வரச் சொல்லியிருக்கிறார். காலை 4.30 மணிக்குப் புறப்பட்ட போலீஸார், 5.00 மணிக்கு சாலிகிராமத்தில் கருணாஸ் குடியிருக்கும் அப்பார்ட்மென்ட்டுக்கு சென்றார்கள்.கேட் தட்டியதும் கேட் திறக்கப்பட்டது, போலீஸை பார்த்தவர்கள், கருணாஸ் முதல்மாடிக்கு வரச்சொன்னார் என்று மரியாதையுடன் அனுப்பி வைத்தார்கள்.

தேனாம்பேட்டை ஏ.சி கோவிந்தராஜ், நுங்கம்பாக்கம் ஏ.சி முத்துவேல்பாண்டி இருவர் மட்டும் உள்ளே சென்றார்கள், வழக்கமான புன்னகையுடன் அவர்களை வரவேற்ற கருணாஸ், சார் ப்ளீஸ் குளிச்சுட்டு வந்துவிடுகிறேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. என்று குளியலறைக்கு சென்றவர் மின்னல் வேகத்தில் வெளியில் வந்தார். சார் டீ, காபி, சாப்பிடறீங்களா என்று கருணாஸ் அதிகாரிகளிடம் கேட்க, தேங்கஸ் சார்… எதுவும் வேண்டாம், நீங்கள் சீக்கிரம் வாங்க பப்ளிக் பார்க்கும் முன்பு போயிடலாம் என்று அவர்கள் கூறியுள்ளனராம். அதன்பிறகு குளித்து ரெடியாகி, சாமி கும்பிட்டுவிட்டு 40 நிமிடத்தில் கருணாஸ் வெளியே வந்துள்ளார்.

ஏ.சி முத்துவேல்பாண்டியிடம் இரண்டு நிமிடம் வீட்டுக்கு வெளியில் ஆதரவாளர்களிடம் பேசுவதற்கு அனுமதிகொடுங்கள் என்று கருணாஸ் கேட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்ட ஆதரவாளர்களைப் பார்த்து, மீட்டிங்கில் பேசுவதுபோல் பேசினார்.

Related posts

Leave a Comment

nine − six =