கர்நாடகாவின் ஜெயலலிதா வழக்கு : மறுசீராய்வு மனு தள்ளுபடி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவரைக் குற்றவாளி என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் குற்றவாளி என அறிவித்து, 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். அதோடு ரூ. 100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் அடங்கிய அமர்வு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தும், கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

இதற்கிடையே ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால் இந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

எனினும், கர்நாடக அரசு சார்பில் மீண்டும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து இறுதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் தான் ஜெயலலிதா மரணமடைந்தார். இதனால், அவரைக் குற்றவாளி என அறிவிக்க வேண்டும். அபராத தொகையை வசூலிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த மனு இன்று (செப்டம்பர் 28) விசாரணைக்கு வந்த நிலையில் கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மறு சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.

Related posts

Leave a Comment

1 × 5 =