கடவுளை வணங்குவதில் ஆணும் பெண்ணும் சமம் என்று கூறி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுகையில், “ஒருபுறம் பெண்களை கடவுளாக பாவிக்கிறோம் மற்றொருபுறம் கட்டுப்பாடுகள் விதிக்கிறோம். பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் என்றும் கூறினார். மேலும் பழமையான கட்டுபாடு பெண்களின் மத வழிபாட்டு உரிமையை மறுக்கிறது. அதனால் அதனைக் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை .
மேலும் கடவுளை வணங்குவதில் ஆண்- பெண் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. தனிமனித சுதந்திரம், பாலின வேறுபாடுகள் இருக்க கூடாது. மதத்தின் ஆணாதிக்க தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி நாரிமான் கூறுகையில், “ஐயப்பன் பக்தர்களுக்கு மட்டும் என்று தனி மனித அடையாளம் இல்லை. மேலும் சட்டப்பிரிவு 26 ஐயப்பன் பக்தர்களுக்கு பாதுகாப்பை வழங்க வழி செய்வதில்லை என தெரிவித்துள்ளார். அனைத்து விதமான மத வழிபாடுகளில் ஈடுபட பெண்களுக்கும் உரிமை உள்ளது. மேலும் சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது அரசியல் சாசன பிரிவு 21-க்கு எதிரானது.
மேலும் 10 முதல் 50 வயது பெண்களை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்காதது சட்டத்திற்கு எதிரானது. அரசியல் சாசனத்தின் 3-வது பாகத்தில் உள்ள அடிப்படை உரிமைகள் சமூகத்தை மாற்றும் நோக்கம் கொண்டவை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், ஆகிய 4 நீதிபதிகளும் தெரிவித்தனர்.
எஞ்சிய நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் நாரிமன் ஆகியோரின் தீர்ப்பிற்கு ஆதரவளிக்கும் விதமாகவே தங்கள் கருத்தை வெளியிட்டனர்.
மேலும் அமர்விலிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில் அவர், மதம் சார்ந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது . மேலும் அரசியல் சாசன பிரிவு 25 சபரிமலை கோவிலுக்குள் பாதுகாப்பை அளிக்கிறது என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.