சர்கார் டீமுக்கு இயக்குநர் முருகதாஸ் எச்சரிக்கை!

சர்கார் படம் பற்றிய எதிர்பார்ப்பு மற்றும் அது குறித்த விவாதங்கள் இசை வெளியீட்டுக்குப் பின் அதிகரித்துள்ளன. விஜய்யின் அரசியல் பேச்சுகுறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் படத்தில் நடித்துள்ள துணை நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் குழுவுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து படக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கின்றனர். ஒவ்வொரு பட உருவாக்கத்திலும் வழக்கமாக நடைபெறும் விஷயம்தான் என்றாலும் அவர்களது பேட்டியின்போது படம் குறித்த முக்கியமான சில விஷயங்களைப் பேச நேர்ந்துவிடுகிறது. இதனால் சுவாரஸ்யம் போய்விடுவதோடு தொடர்பில்லாத யூகங்களுக்கு வழிவகுப்பதாகவும் அமைந்துவிடுகிறது.

இந்நிலையில் சர்கார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பதிவில், “அன்பான சர்கார் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களே, பல்வேறு நபர்களின் கடின உழைப்பை இந்த படத்தில் செலுத்தியுள்ளோம். இருந்தபோதிலும் துணை நடிகர்களால் பல பேட்டிகள் கொடுக்கப்படுகின்றன, இது நெறிமுறையற்றது. முன்னறிவிப்பில்லாமல் பேட்டி கொடுப்பவர்கள் மேல் இனிவரும் காலங்களில் சட்டரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அரசியலை மையமாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளதாக விஜய் தெரிவித்ததையடுத்து அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் படம் வெளியாக உள்ளது.

Related posts

Leave a Comment