சர்வதேச போலீஸ் எனப்படும் இன்டர்போல் தலைவர் சீனாவில் கைது?

உலக அளவில் தேடப்படும் தீவிரவாதிகள், போதை மருந்து கடத்தல் குற்றவாளிகள் போன்றவர்களை கைது செய்வதற்காகவும் உலக நாடுகளின் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் அமைப்பாகவும் இருப்பதுதான் சர்வதேச போலீஸ் எனப்படும் இன்டர்போல் அமைப்பு.

ஆனால், கடந்த ஒருவாரமாக இன்டர்போல் அமைப்பின் தலைவரையே காணவில்லை என்று அந்த அமைப்பு தேடிக் கொண்டிருப்பதுதான் இப்போது உலக அளவில் பிரபலமான அனைத்து ஊடகங்களிலும் பேச்சாக இருக்கிறது. அதுவும் தனது தாய்நாடான சீனாவுக்குச் சென்ற இன்டர்போல் தலைவர் மெங்க் ஹாங்வேயைக் காணவில்லை என அவரது மனைவி பிரான்ஸ் அரசிடம் (இன்டர்போல் தலைமை அலுவலகம் இருக்கும் நாடு) புகார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் இன்டர்போல் தலைவர் சீன அரசால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சீனப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. சீனாவின் பொது பாதுகாப்புத் துறை துணை அமைச்சராகவும், சீனா நாட்டுப் போதை பொருள் தடுப்பு பிரிவு துணைத் தலைவராகவும், பயங்கரவாத தடுப்புப் பிரிவிலும் பணியாற்றிய ஹாங்வே, பின் சர்வதேச போலீஸ் எனப்படும் இன்டர்போல் அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி தனது சொந்த நாடான சீனாவுக்குச் சென்ற ஹாங்வே காணாமல் போனார் என்ற தகவல் வெளியான நிலையில், அவர் மீதான பழைய புகார்களுக்காக ஹாங்வே சீன அரசால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணையில் இருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின.

“ஹாங்வே கடந்த வாரம் சீனாவில் தரையிறங்கிய உடனேயே, சீன காவல்துறையின் ஒழுங்கு நடவடிக்கைத் துறை அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார்” என்று ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் ‘தெற்கு சீனா மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

அவர் பதவியில் இருந்தபோது நடந்த முறைகேடுகளுக்காக விசாரிக்கப்படுகிறாரா அல்லது எதற்காக விசாரிக்கப்படுகிறாரா என்பது பற்றிய எந்தத் தகவலையும் அந்த சீன மொழிப் பத்திரிகை வெளியிடவில்லை. விசாரணை எங்கே நடைபெறுகிறது என்பது பற்றியும் தகவல் இல்லை.

சீன அரசிடம் இருந்தும் இதுவரையில் இன்டர்போல் தலைவர் பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படாத நிலையில் இன்டர்போல் அமைப்பின் செயலாளர் ஜர்கன் ஸ்டக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்டர்போல் அமைப்பின் தலைவர் ஹாங்வே காணாமல் போனது தொடர்பாக சீன அரசாங்கத்திடம் முறைப்படி தொடர்புகொண்டு அவரது நிலைமை பற்றி தகவல்களைத் தருமாறு வேண்டிக் கொண்டிருக்கிறோம்.

இன்டர்போல் அமைப்பின் தலைமைச் செயலகம் சீன அரசாங்கத்திடம் இருந்து பதிலை எதிர்நோக்கியிருக்கிறது. ஹாங்வே நல்லவிதமாக நடத்தப்பட வேண்டுமென்று இன்டர்போல் எதிர்பார்க்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Related posts

Leave a Comment

six + 5 =