ஆட்டோகிராப் வேற ; 96 படம் வேற – அதனால் சம்பந்தப்படுத்தாதீங்க – சேரன் வேண்டுகோள்!

ஆட்டோகிராப் படத்தையும்  `96′ படத்தையும் சம்பந்தப் படுத்த வேண்டாம் என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

இயக்குநர் பிரேக் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த படம் `96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ வெளியிட்டுள்ளது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பள்ளிப்பருவ காதல், படத்தில் பேசப்பட்டிருப்பதால், இந்தப் படம் இயக்குநர் சேரன் இயக்கி நடித்திருந்த ஆட்டோகிராப் படத்தோடு ஒப்பிட்டு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ் சினிமாவின் மிகமுக்கியமான படம் 96. ஆட்டோகிராப்பையும் `96’ படத்தையும் சம்பந்தப்படுத்த வேண்டாம். அது கடந்து வந்த காதல்களின் நினைவுகள். இது காதலை தொலைத்த இருவரும் வாழ்க்கையை கடந்த நிலையில் சந்திக்கும்போது பரிமாறிக்கொள்ளும் உணர்வுகள். இயக்குநர் பிரேம் குமாருக்கு பாராட்டுக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், சேரன் தனது அடுத்த பதிவில், “விஜய் சேதுபதியும் திரிஷாவும் மெல்லிய உணர்வுகளை அழகாக பதிவுசெய்து இவ்வருடத்தின் முக்கிய விருதுகளுக்கு தகுதி உடையவர்களாகிறார்கள். இருவரை மட்டுமே வைத்து காட்சிகளை அழகாக கோர்த்த இயக்குனர் மிகச்சிறந்த இயக்குனராக மிளிர்வார். இதுபோல சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும்” என்று கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment

4 × three =