காயம்குளம் கொச்சுண்ணி 1830ஆம் நூற்றாண்டில் காயம்குளம் பகுதியில் வாழந்த பழம்பெரும் திருடன் ஒருவரை பற்றிய படமாகும். அத்திருடன் அப்போது வாழ்ந்த செல்வந்தர்களிடமிருந்து பணம், பொருள் போன்றவற்றை திருடி நலிந்த மக்களுக்கு வழங்கி கடவுளாக போற்றப்பட்டவரைப் பற்றிய உண்மைக்கதையை திரைக்கதையாக்கி சிறப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இது நாள் வரை சமகால சமூக கதைகளையே படமாக இயக்கிவந்தவர் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. தமிழில் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தை இயக்கியவரும் இவரே. ஆனால் தற்போது, முதன்முறையாக பீரியட் படமாக இதை இயக்கி வெளியிட்டுள்ளார்.
படத்தின் கதை என்னவென்றால் ஏழை இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த கொச்சின்னி, இளம் வயதிலேயே வறுமையின் கொடுமையை அனுபவிக்கிறார். பசிக்காக சிறிதளவு அரிசி திருடி மாட்டிக்கொண்டு, நிர்வானமாக அடிவாங்கும் தனது தந்தையின் நிலையை பார்க்கும் கொச்சின்னியை, அவரது அம்மா, ”எங்களுடன் இருந்தால் பசியால் செத்துடுவ, அதனால் எங்கயாவது போய் பொயச்சுக்க”, என்று கூறி அனுப்ப, பிராமணர் ஒருவரிடம் பசியாறும் கொச்சின்னி, அவர் மூலமாக எம்.எஸ்.பாஸ்கரின் மளிகை கடையில் வேலையும் செய்து வர, ஒரு முறை படகில் செல்லும் போது ஆற்றில் தவறி விழும் தனது முதலாளி எம்.எஸ்.பாஸ்கரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் போது, தண்ணீர்க்கு அடியில் தங்க நகைகளோடு மூழ்கிய படகு ஒன்று இருப்பதை பார்க்கிறார். இதை பிராமண செல்வந்தர்களிடம் கூற, அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு தெரியாமல் அந்த தங்கத்தை தங்கள் வசப்படுத்திக் கொள்ள முடிவு செய்வதோடு, அந்த தங்கத்தை எடுத்துக் கொடுக்கும் பணியை கொச்சின்னியிடும் கொடுக்கிறார்கள்.
அதே சமயம், தங்கத்தை எடுத்துக் கொடுக்க சன்மாணமாக எதை கேட்டாலும் செய்வதாக அவர்கள் கொச்சின்னியிடம் கூற, அதற்கு, தான் வளரும் இஸ்லாமிய குடும்பத்தில் உள்ள பெண்ணின் திருமணத்திற்காக சில தங்க நாணயங்களை கேட்கும் கொச்சின்னி, தலித் மக்களுக்கு ஒருவேளை விருந்து வைக்க வேண்டும் என்பதோடு, தான் காதலிக்கும் இந்து பெண்ணான பிரியா ஆனந்தை திருமணம் செய்துகொள்ள வேண்டும், என்றும் கேட்கிறார். கொச்சின்னியின் இந்த மூன்று கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் பிராமாண செல்வந்தர்கள், தங்க நகைகள் தங்களது கைக்கு வந்ததும், கொச்சின்னி மீது திருட்டு பழி சுமத்தி அவருக்கு சாட்டையடி கொடுத்து, மூன்று நாட்கள் உணவு, தண்ணீர் இன்றி தலைகீழாக தொங்க விடுகிறார்கள். இப்படி தவறே செய்யாமல், துரோகம் இழைக்கப்பட்டு தண்டனைக்கு ஆளான சாதாரண மனிதனாக இருந்த கொச்சின்னி, தனக்கு துரோகம் இழைத்தவர்களை துரத்தி துரத்தி அடிப்பதோடு, இருப்பவர்களிடம் இருந்து எடுத்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் ‘காயம்குளம்’ கொச்சின்னியாக எப்படி உருவாகிறார், என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நாயகன் நிவின்பாலி சாதாரண யூத் மற்றும் ஆக்ஷன் ஹீரோ என்று இரண்டு பரினாமங்களில் அசத்தி இருக்கிறார் குறிப்பாக இதுநாள் வரை செய்திராத அளவுக்கு இதில் ஆக்சன் காட்சிகளில் பின்னி எடுத்திருக்கிறார் மனிதர். மோகன் லால், கெஸ்ட் ரோலில் கொஞ்சூண்டு வந்தாலும் மிரட்டி தனக்கே உரித்தான பாணியில் படத்துக்கே பலம் சேர்த்திருக்கிறார். ப்ரியா ஆனந்த், களரி ஆசிரியராக நடித்திருக்கும் பாபு ஆண்டனி, கேசவன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் சன்னி வேய்ன் என படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள். கோபி சுந்தரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் பினோட் பிரதான், நீரவ்ஷா, சுதீர் பால்சானே ஆகியோரது பணியும், கலை இயக்குநரது பணியும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
நாயகன் ஒரு ராபின்ஹூட் டைப்பான கொள்ளைக்காரன் என்பதையெல்லாம் தாண்டி, அவன் படத்தில் நடத்தும்ம் சமூக மாற்றங்கள் தற்போது பெரிதும் பேசப்பட வேண்டியன. அதை வசனங்களின் மூலமாகவும் , காட்சிகளின் மூலமாகவும் சிறப்பாகச் செய்திருக்கிறது இத்திரைப்படம். இங்கிருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு படிநிலைகளில் பிராமணர்களுக்கும் இடைநிலை சாதியினர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையிலான உறவுமுறையில் கொச்சுண்ணி மாதிரியான இஸ்லாமியரின் படிநிலை எங்கு இருக்கிறது; ஆங்கிலேயர்கள் இந்தப் படிநிலையை எப்படிப் பார்க்கிறார்கள். அவர்கள் இதைத் தங்களுக்கு ஏற்றவாறு எப்படி மாற்றிக்கொள்கிறார்கள் போன்றவற்றைப் பேசியிருக்கிறார்கள்.
அதனாலேயே சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படமிது