பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நடந்த ரயில் விபத்துக்குக் காரணம் செல்பியா?

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நேற்று நடந்த ரயில் விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் பலர், தண்டவாளத்தில் இருந்து செல்பி எடுத்து கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் கூட ரயில் வருவதை அவர்கள் கவனிக்காமல் இருக்க காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரின் செளரா பஜார் பகுதியில் உள்ள ஜோடா பதக் என்ற பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய காலி இடத்தில், நேற்று தசரா கொண்டாட்டம் நடந்தது. நிகழ்ச்சியின் நிறைவாக, மாலை 6.45 மணிக்கு ராவணன் உருவ பொம்மை பட்டாசுகள் மூலம் கொளுத்தப்பட்டது. பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்த போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த தண்டவாளம் வழியாக ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் ரயில் அதிவேகத்தில் கடந்து சென்றது.

இந்த கோர விபத்தில் 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பலியானவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடைபெற்றுவதற்கு முன்னர், அங்கு ராவண உருவ பொம்மை கொளுத்தப்பட்டதை பலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ரயில் மக்கள் மீது மோதுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. வீடியோவில் பார்க்கும் போது, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பலர், ராவண வதத்தை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர். மேலும், பலர் செல்பி எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர்.

இதனால் கூட, ரயில் வருவதை அவர்கள் கவனிக்காமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு முந்தைய கால கட்டங்களிலும் செல்பி மோகத்தால் பல பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர்.

Related posts

Leave a Comment

four + two =