சபரிமலை விவகாரம்: அமித் ஷா Vs பினராயி விஜயன்!

கடந்த சில வாரங்களாக நிலவும் சபரிமலை விவகாரம் குறித்து பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்த கருத்துகள் அனைத்தும் உச்ச நீதிமன்றம், அரசமைப்பு சட்டம் மற்றும் நீதித் துறை மீதான தாக்குதல் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டித்துள்ளார்.

கேரள மாநிலம் கன்னூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, ‘சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதை கண்டித்து போராட்டம் நடத்திவரும் பக்தர்களுக்கு எதிராக மாநில கம்யூனிஸ்ட் அரசு செயல்படுகிறது. மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 2 ஆயிரம் பக்தர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

போராட்டத்தை ஒடுக்கும் செயலில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு தொடர்ந்து ஈடுபடுமானால் அதற்காக பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அரசின் இந்த செயல் நெருப்புடன் விளையாடுவது போன்றதாகும்.
உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துகிறேன் என்ற பெயரில் நடந்துவரும் அடக்குமுறைகளை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டால் மாநில அரசை கவிழ்க்கவும் பாரதிய ஜனதா தொண்டரகள் தயங்க மாட்டார்கள்’ என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த பினராயி விஜயன், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த முயற்சிக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பாரதிய ஜனதா தலைவர் மிரட்டும் வகையில் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது என்று கூறினார். அவரது கருத்து உச்ச நீதிமன்றம், அரசமைப்பு சட்டம் மற்றும் நீதித் துறையின் மீதான தாக்குதலாகவே இருக்கிறது என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment