மாதவன் டைரக்‌ஷனில் தயாரான ‘ராக்கெட்ரி- நம்பி விளைவு!

ராக்கெட்ரி – நம்பி விளைவு (Rocketry – The Nambi Effect) என்கிற படத்தை அனந்த் மகாதேவனுடன் இணைந்து இயக்கியுள்ளார் மாதவன். இதுஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகும். இஸ்ரோ விஞ்ஞானியாகப் பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசர் நேற்று (அக்டோபர் 31) வெளியிடப்பட்டது. அதற்கு சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

டீசரில், செவ்வாய்க் கோளுக்கு இந்தியா செயற்கைக் கோள் அனுப்புகிறது. அதைச் சிறையிலிருந்தபடி நம்பி நாராயணன் பார்த்து வாய்ஸ் ஓவரில், “இந்த வெற்றியை இருபது வருஷத்துக்கு முன்னாடியே நம்ம சாதித்திருக்க முடியுமென்று நான் சொன்னா…” என்று தொடங்கி… “நான் சிறையில் இருந்த அந்த ஐம்பது நாளில் நம் நாட்டிற்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு பற்றித்தான் இந்தக் கதை. என்னைப் பற்றி இல்லை” என்று சொல்லி முடிக்கிறார். எனவே நம்பி நாராயணின் முழு வாழ்க்கையும் படமாக்காமல் ஜெயிலில் இருந்த ஐம்பது நாட்கள் மட்டும்தான் இந்தப் படம் என்பதை யூகிக்க முடிகிறது.

தமிழரான நம்பி நாராயணன், நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர். இஸ்ரோ விஞ்ஞானியாகப் பணியாற்றிய நம்பி நாராயணன், வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 1994ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். எனினும், நம்பி நாராயணன் மீது பொய் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, வழக்கிலிருந்து அவரை சிபிஐ விடுவித்தது.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பி நாராயணனுக்கு எட்டு வாரங்களுக்குள் ரூ.50 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி உத்தரவிட்டது. அவர் மீதான கைது நடவடிக்கை தேவையற்றது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதன்படி, ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையை நம்பி நாராயணனுக்குக் கேரள அரசு வழங்கியுள்ளது. சென்ற மாதம் (அக்டோபர்) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.50 லட்சத்துக்கான காசோலையை நம்பி நாராயணனிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் அளித்தார்.

மாதவன், தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்திருந்தாலும், இறுதிச்சுற்று படத்தில் கூடுதல் திரைக்கதையில் மட்டும் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. தற்போது முதன்முறையாக அவர் இயக்குநர் பொறுப்பை கையில் எடுத்திருக்கிறார். இதன் மூலம் விரைவில் அவர் தனியாகப் படம் இயக்குவார் என்று யூகிக்கலாம்.

ராக்கெட்ரி – நம்பி விளைவு டீசர்

Related posts

Leave a Comment