மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை! – மன்மோகன் சிங் காட்டம்!

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் இன்னும் மீண்டு வரவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ஆயிரம் ரூபாய் மற்றும் அப்போது புழக்கத்தில் இருந்து ஐந்நூறு ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்நிலையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் இரண்டாண்டு நிறைவையொட்டி அதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாதிப்புகளை சரி செய்யும் வகையில் பொருளாதார கொள்கைகளில் நிலைத்தன்மையை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஒவ்வொருவரும் தற்போது உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வயது, மதம், தொழில் என எந்த பாகுபாடும் இன்றி ஒவ்வொரு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதோடு இன்னும் பாதிப்புகள் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறு, நடுத்தர நிறுவனங்கள் இதுவரை மீண்டு வராததன் காரணமாகவே இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முழுமையான பாதிப்புகளை நாம் உணரவில்லை என்றும், பொருளாதார கொள்கைகளை வகுக்கும்போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம் என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மேலும் பணமதிப்பிழப்பு நாட்டின் பொருளாதாரத்தின் மீதும், சமூகத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றும், இதற்கு சமூகத்தின் ஒவ்வொருவரும் சாட்சியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment

7 − five =