கோட் சூட் போடும் தைரியம் இன்னும் எனக்கு வரவில்லை – கல்லூரி விழாவில் பாக்யராஜ் கலகல!

சென்னை, திநகரில் ஸ்ரீ சங்கர்லால் சுந்தரிபாய் ஷாசுன் ஜெயின் கல்லூரி மற்றும் மத்திய அரசு திட்டத்தின் கீழ் உள்ள ஊடகம், பொழுதுபோக்கு திறன் வளர்ச்சிக் குழு (MESC) இணைந்து ஊடகம், பொழுதுபோக்கு, கலை,கலாசாரம் தொடர்பாக மாணவிகளுக்குத் திறன் வளர்பயிற்சி அளிப்பதற்கான ‘சென்டர் ஆப் எக்சலென்ஸ்’ எனும் ஒரு புதிய துறையைத் தொடங்கியிருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (நவம்பர் 14-ம் தேதி) கையெழுத்திடப்பட்டது. இந்த தொடக்க விழாவின் சிறப்பு விருந்தினர்களாக, பிரபல பாலிவுட் இயக்குநர் சுபாஷ் கய், பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், இயக்குநர் கே.பாக்யராஜ், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகை ரோகினி, நடிகர் விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதலில் பேசிய சுபாஷ்கய், பத்மா சுப்பிரமணியம் ஆகியோர், ஆங்கிலத்தில், கலைகளுக்கான முக்கியத்துவம் பற்றியும், புதிதாகத் தொடங்கப்பட்ட துறையின் சிறப்பு பற்றியும் பேசினர். இதைத் தொடர்ந்து இயக்குநர் கே.பாக்யராஜை பேச அழைக்க அவர் முதலில் மறுத்துவிட்டார். பிறகு பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் “மன்னித்துவிடுங்கள் சுபாஷ் கய் ஜி, நான் தமிழிலேயே பேசுகிறேன், அதுதான் எனக்கு வசதியாக இருக்கும்” என்றார். தொடர்ந்து அதே தி நகரில் அவர் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கி, கடின உழைப்பால் மட்டுமே இன்று இவ்வளவு வளர்ந்ததாகவும், இந்தப் புதிய ஊடகத் துறை பலருக்கு ஒரு படிக்கல்லாக இருக்கும் எனவும் பேசினார்.

இதையடுத்து முதலில் பேச மறுத்த பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர் பேசி முடித்ததும் மேடை ஏறினார். அப்போது பேசிய அவர், “அனைவரும் ஆங்கிலத்தில் பேசியதால் நான் என்ன பேசுவது என்று அமைதியாக இருந்தேன், சந்திரசேகர் தமிழில் பேசி, நான் பேசுவதற்கு வழி செய்தார், அதன்பின் தான் தைரியமாக நான் மேடை ஏறினேன், இருந்தபோதும் சந்திரசேகர் போல கோட் சூட் போடும் தைரியம் எல்லாம் இன்னும் எனக்கு வரவில்லை” என்று நகைச்சுவையாகப் பேசினார். தொடர்ந்து கல்லூரிக்கும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு திறன் வளர்ச்சி குழுவுக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்தி திரைப்பட இயக்குநர் சுபாஷ் கய், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கான திறன் வளர்ச்சிக் குழுவின் தலைவர் ஆவார். இது மத்திய அரசின் திறன்மேம்பாடு நிறுவனத்தின் ஆதரவில் செயல்படும் நிறுவனம் ஆகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் திரைப்பட இயக்கம். ஒளிப்பதிவு,ஒளியமைப்பு, அனிமேஷன், கணினி விளையாட்டுகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பான செயல்முறை கல்வி, பயிற்சி வகுப்புகள் இனி இந்தக் கல்லூரியில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment

17 − eleven =