கன்னடத் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவரான அம்பரீஷ் காலமானார்

பிரபல கன்னட நடிகரும் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவருமான அம்பரீஷ் உடல் நலக்குறைவால் நேற்று(நவம்பர் 24) காலமானார். அவருக்கு வயது 66.

கன்னடத் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் அம்பரீஷ். ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவருக்கு நேற்று இரவு 9 மணியளவில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அம்பரீஷைக் கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அம்பரீஷ் காலமானார் என மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிவித்தார்கள்.

இது குறித்து பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர், “வீட்டில் இருந்து நடிகர் அம்பரீஷை அழைத்து வரும்போது சுயநினைவின்றி இருந்தார். அதன்பிறகு சுவாசம் இயல்புநிலைக்கு வருவதற்குத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் இரவு 10.15 மணிக்குப் பிரிந்தது” எனத் தெரிவித்தார்.

திரை வாழ்க்கை

கடந்த 1952ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி மாண்டியா மாவட்டம், தொட்டரசினகெரெவில் நடிகர் அம்பரீஷ் பிறந்தார். திரைப்படங்களில் வில்லன் நடிகராக அறிமுகமானவர், படிப்படியாக உயர்ந்து, ஹீரோவாக வலம் வந்தார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அம்பரீஷ். முரட்டுக்காளை முதலான படங்களில் நடித்த சுமலதாவை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

அரசியல் வாழ்க்கை

அரசியலிலும் நடிகர் அம்பரீஷ் தனி முத்திரை பதித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாகவும், மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார். ஜனதா தளம் கட்சியில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் அம்பரீஷ். மாண்டியா தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று சித்தராமையா அமைச்சரவையில் 2013 முதல் 2016 வரை வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்து, சிறப்பாகப் பணியாற்றினார்.

கடந்த 2006-07ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக நடிகர் அம்பரீஷ் இருந்தார். காவிரிப் பிரச்சினை காரணமாக தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

முதல்வர் இரங்கல்

நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் ஆழ்ந்த வருத்தமும், இரங்கலும் தெரிவித்துள்ளனர். அம்பரீஷ் இறந்த செய்தி அறிந்ததும், முதல்வர் குமாரசாமி, சித்தராமையா இருவரும் மருத்துவமனைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அவரின் மறைவையொட்டி, கர்நாடக மாநில அரசாங்கம் மூன்று நாள் துக்கம் மேற்கொள்கிறது. மேலும் அம்பரீஷிற்கு நினைவு மண்டபம் எழுப்பப்படும் என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். நடிகர் அம்பரீஷின் உடல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த்

ரஜினியின் மிக நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒருவராகவும் திகழ்ந்தவர் அம்பரீஷ். இவரின் மறைவுச் செய்தி அறிந்த ரஜினி, “ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம். ஒரு இனிய நண்பரை இழந்து நிற்கிறேன். அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நேற்று இரவு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டவர், இன்று காலை அம்பரீஷ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை பஞ்சு அருணாசலம் ப்ரியா எனும் திரைப்படமாகத் தயாரித்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினி, ஸ்ரீதேவியுடன் அம்பரீஷும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதக்கது.

கமல் ஹாசன்

42 வருடங்களாக என் நண்பர் திரு.அம்பரீஷ். முரட்டு உருவம், மழலை உள்ளம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும், என்னைப் போன்ற நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் கமல் ஹாசன்.

Related posts

Leave a Comment

3 × three =