மேகதாது அணை விவகாரம்: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேறியது!~

கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் எல்லா கட்சியினரும் கவலைப்படும் விவகாரமாகி விட்ட மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கான விரிவானத் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது. இதுதொடர்பாக விவாதிக்க இன்று (டிசம்பர் 7) தமிழக சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று மாலை 4.00 மணியளவில் சட்டமன்றக் கூட்டம் தொடங்கியது.

சட்டசபை ஆரம்பித்தவுடன் அரசின் தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மேகதாட்டுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி தந்தது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மேகதாட்டு அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன். தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் கருத்துக்களை எடுத்துரைத்து, ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து, “5.12.2014, 27.03.2015 ஆகிய நாட்களில் மேகதாட்டுவில் புதிய அணை கட்டக்கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கருத்தில் கொள்ளாமலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, கீழ்படுகை மாநிலங்களின் முன்அனுமதி பெறாமல் கர்நாடக அரசு எந்தவொரு திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்பதையும் மீறி, தற்போது கர்நாடக அரசு மேகதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான ஆரம்ப பணிகளை துவக்க உள்ளதற்கும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வளக் குழுமம் அனுமதி வழங்கியதற்கும் தமிழக சட்டமன்றம் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய நீர்வளக் குழுமம் வழங்கிய அனுமதியைத் திரும்பப் பெற, அக்குழுமத்திற்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும். காவிரிப் படுகையின் எந்த இடத்திலும் தமிழகத்தின் இசைவின்றி எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்” என்று பேசி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வரும், அவை முன்னவருமான பன்னீர்செல்வம், “மேகதாட்டு அணை தொடர்பாக இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடக அரசு சட்டத்திற்கு புறம்பாக அணை கட்டுவது தவறு என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. காவிரிப் படுகையில் எந்த அணையும் கட்டக்கூடாது என்பது தான் எங்கள் வாதம்” என்று எடுத்துவைத்தார்.

எதிர்க்கட்சிகள் ஆதரவு

தீர்மானத்திற்கு ஆதரவளித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாட்டு குறித்து பேச சட்டப்பேரவை கூட்டியதற்கு நன்றி” என்று தெரிவித்து, கஜா புயல் குறித்தும் பேச அனுமதி கோரினார். ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்.

இதனையடுத்து உரையாற்றிய ஸ்டாலின், “கஜா புயலின் வடு ஆறுவதற்கு முன்பே மேகதாட்டு அணை கட்ட அனுமதி அளித்தது வருத்தமளிக்கிறது. அணை கட்டுவது குறித்து முன்பே உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றிருக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில், மாநிலத்தின் சார்பில் உறுப்பினர் யாரும் இல்லை. இன்று வரை நிரந்தர உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமாக இதனை நிறைவேற்றி இருக்க வேண்டும். இருப்பினும் மக்களின் நலனுக்காக முழுமையாக ஆதரிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

துரைமுருகன் பேசுகையில், “மேகதாட்டுவில் கர்நாடக அரசு எத்தனை அணை கட்டுகிறது” என்று கேள்வி எழுப்பினார். தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமிழக விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்று குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசி முடித்த பிறகு, அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலுரையாற்றினார்.

தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் தமிமுன் அன்சாரி, தனியரசு, சுயேச்சை எம்.எல்.ஏ தினகரன் ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து மேகதாட்டுவில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சபாநாயகர் தனபால் பேசுகையில், “வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது” என்று குறிப்பிட்ட சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

சபாநாயகருக்கு நன்றி

தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதைத் தொடர்ந்து, சபாநாயகர் தனபாலை நேரில் சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment

3 × three =