நாளை மறுநாள் சந்திராயன் 2 ஏவப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சந்திராயன் திட்டம் வெற்றி பெற்றதையடுத்து, நிலவில் இறங்கி விரிவான ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சந்திராயன் 2 விண்கலம் ஏவும் முயற்சியில் இறங்கியது இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ. வரும் ஜனவரி 3ஆம் தேதியன்று இது விண்ணில் ஏவப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு மாறாக, சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படுவது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது இஸ்ரோ.
கடந்த டிசம்பர் 8ஆம் தேதியன்று சீனாவின் சாங் இ4 விண்கலம் நிலவின் பின்பகுதியில் தரையிறங்கும் வகையில் ஏவப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த விண்கலம் நிலவில் கால் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சந்திராயன் 2 விண்கலம் ஏவப்படுவது தாமதம் செய்யப்படுவதாகத் தகவல் வெளியானது. இது குறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன், கடந்த 6 மாதங்களாகப் பல்வேறு விண்கலங்களை ஏவியதால் சந்திராயன் 2 ஏவுவதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
“தற்போதுள்ள சூழலில் சந்திராயன் 2 ஏவப்படும் நாளை அறிவிக்க முடியாது. இன்னும் 10 முதல் 12 நாட்களில் அது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று செய்தியாளர்களிடம் கூறினார். செவ்வாயில் விண்கலம் ஏவுவதற்குக் கால அவகாசம் எடுத்துக்கொள்வது போலல்லாமல், நிலவில் வெகு சீக்கிரம் இந்திய விண்கலம் தரையிறங்கும் என்று அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார்.