பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ கொண்டாடப்படுகின்றது. இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.

அறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு வருவார்கள்.

இந்நிலையில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று தொடங்கியது. இன்று தொடங்கிய தைப்பூசத் திருவிழா, ஜனவரி 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6-ம் நாளான ஜனவரி 20-ம் தேதியும், தைப்பூசத் தேரோட்டம் 7-ம் நாளான ஜனவரி 21-ம் தேதியும் நடைபெறுகிறது.

தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் இலவச தங்குமிடங்கள், குளியலறை, கழிப்பறை, போன்ற வசதிகள் கோயில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

பழனியில் கூடுதலாக நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள பேருந்து நிலையத்திலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்ய மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related posts

Leave a Comment

one × one =