கமல்-ஷங்கர்-லைக்கா கூட்டணியில் ‘இந்தியன்-2’ திரைப்படம் துவங்கியது..!

ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமானது.

1996ம் ஆண்டு இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளிவந்தது. மிகப் பெரும் வெற்றி பெற்ற அந்தப் படம் இயக்குனர் ஷங்கரை நட்சத்திர இயக்குனராக உயர்த்தியது. அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் – கமல்ஹாசன், சிறந்த கலை இயக்குனர் – தோட்டாதரணி, சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் வெங்கி, என மூன்று தேசிய விருதுகளை அந்தப் படம் பெற்றது.

இத்திரைப்படம் இந்தியாவில் வேரூன்றியிருக்கும் லஞ்சம், ஊழல் பற்றி வெளிப்படையாகப் பேசியதால் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதுவரையிலான அனைத்துத் தமிழ்ப் படங்களின் வசூலையும் இத்திரைப்படம் முறியடித்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அனைத்துப் பாடல்களுமே இளைஞர்களை துள்ளலாக ஆட வைத்திருந்ததால் இசையிலும் இப்படம் முக்கியமான படமாகவே அமைந்துவிட்டது. இந்தியன் படத்தில் வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ‘சேனாதிபதி’ என்கிற கேரக்டரில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.

22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது இதுவே முதல் முறை. இடையில் கமல்ஹாசனும், ஷங்கரும் எந்திரன் படத்தில் இணைய வேண்டியது தவறிப் போனது. ஒரு பெரும் எதிர்பார்ப்புடன் அவர்கள் மீண்டும் இணைவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் 2 படத்தின் முதல் பார்வை மற்றும் நேற்று வெளியிட்ட போஸ்டர்கள் அனைத்திலும் இந்தியன் தாத்தா மட்டுமே இடம் பெறுகிறார். அதனால், படத்தில் வயதான கமல்ஹாசன் மட்டும் இருக்கிறாரா அல்லது இளமை கமல்ஹாசனும் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

கமல்ஹாசனுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அவரும் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. படத்தில் சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இன்று இப்பட படப்பிடிப்பு ஆரம்பமானது. பூஜையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், உலக நாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால், இயக்குநர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ், கலை இயக்குநர் முத்துராஜ், பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து மற்றும் விவேக் ஆகியோருடன் தயாரிப்பாளர்கள் K.கருணாமூர்த்தி மற்றும் A.M.ரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment

sixteen + 15 =