கின்னஸ் சாதனை படைத்தது : விராலி மலை ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நேற்று (20–ந் தேதி) நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டியின் நிறைவாக உலக சாதனை கூட்டமைப்பின் சார்பில் விராலிமலை ஜல்லிக்கட்டு குழுவினருக்கு உலக சாதனைக்கான சான்றிதழை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, கலெக்டர் கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

உலக சாதனை நிகழ்த்தப்பட்டது குறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் விராலிமலையில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து, பார்வையிட்டதுடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பார்வையிட்டார்கள்.

மேலும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியினை லண்டனை சேர்ந்த உலக சாதனை கூட்டமைப்பின் உறுப்பினர்களான மார்க் மற்றும் மெலனி ஆகியோர் பார்வையிட்டு மதிப்பீடு செய்தார்கள். இதன்மூலம் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதல் முறையாக 1,353 காளைகள் இடம் பெற்று உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டு, விராலிமலை ஜல்லிக்கட்டு குழுவினருக்கு உலக சாதனை படைத்ததர்க்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் இன்னும் அதிக காளைகள் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் இருந்த போதிலும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஜல்லிக்கட்டுப் போட்டியை பாதுகாப்பான ஜல்லிக்கட்டுப் போட்டியாக நடத்தும் வகையில் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் 700 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டை சேர்ந்த முருகானந்தம் என்பவர் தேர்வு செய்யப்பட்டு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று 2 முதல் 6 இடங்களை பிடித்த பிற மாடுபிடி வீரர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த காளையின் உரிமையாளரான புதுக்கோட்டை மாவட்டம், ராபுசல் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று 2 முதல் 6 இடங்களை பிடித்த சிறந்த காளையின் உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் ஆண்டுகளிலும் விராலிமலை ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்ந்து உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழர்களின் வீரமிகு விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment