இந்திய உணவு குறித்த தவறான தகவல் பரவுவதா? கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களிடம் மத்திய அரசு விசாரணை!

ஃபேஸ்புக் ,வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் இந்திய உணவுப் பொருட்கள் குறித்து வெளியாகும் தவறான தகவல்களை தடுக்க வேண்டும் என கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்தியாவில் தரமற்ற உணவுப் பொருட்கள் அதிகம் இருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது. இதனையடுத்து தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தவறான தகவல்கள் பரப்பும் கணக்குகள் மற்றும் பக்கங்களை முடக்க வேண்டும் என கூகுள், பேஸ்புக் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை கூறுகையில், தவறாக பரப்பப்படும் தகவல்களால் உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு குறைந்துவிடும். மக்களின் நம்பிக்கையை கெடுத்துவிடும். பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்ற தவறான தகவல்கள் வேகமாக பரவுகின்றன. இது போன்ற தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை முடக்க வேண்டும் என கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என தெரிவித்துள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் கூறுகையில், உணவு குறித்த தவறான தகவல் பரவுவது உணவு சார்ந்த தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது இந்தியா மீதான மக்களின் நம்பிக்கையையும் கெடுத்து விடும். இந்த விவகாரத்தில் சமூக வலைதள நிறுவனங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment