கும்பமேளா நிகழ்ச்சி, மகா சிவராத்திரியான இன்றுடன் முடிகிறது!

உத்தரப் பிரதேசம், அலகாபாத்தில் கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி புகழ் பெற்ற கும்பமேளா விழா தொடங்கியது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து புனித நீராடினர். சில விசேஷ நாட்களில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பதால், அதிக அளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

கடந்த ஜனவரி 15 மகா சங்கராந்தி, ஜனவரி 21ல் பவுஷ் பூர்ணிமா, பிப்ரவரி 4 மவுனி அமாவாசை, பிப்ரவரி 10ம் தேதி பசந்த் பஞ்சமி, பிப்ரவரி 19 மகி பூர்ணிமா ஆகிய விஷேச தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதுவரை 22 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில தலைவர்கள் இதில் நீராடினர். இந்நிலையில், இந்த கும்பமேளா விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. மேலும், மகா சிவராத்திரியான இன்று கும்பமேளாவின் கடைசி புனித நீராடலும் நடக்கிறது. இதனால், வழக்கத்துக்கு அதிகமாக பக்தர்களின் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி தான் கும்பமேளாவின் மிக முக்கியமான நாள். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு திங்களன்று மகா சிவராத்திரி வந்துள்ளதாகவும், அதனால் இது கும்பமேளாவின் மிக முக்கியமான நாளாகவும் கருதப்படுகிறது.

Related posts

Leave a Comment

19 − sixteen =