ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அசார் பலி?!

இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரை பாகிஸ்தான்அரசு கொன்று விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம், பாலகோட் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த அவனுக்கு ரகசிய இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அது பலனின்றி நேற்று இறந்ததாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானதற்கு, பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள அந்த அமைப்பின் முக்கிய முகாம் மீது இந்திய போர் விமானங்கள் கடந்த 26ம் தேதி குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இதில், 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் ஐநா.வில் முயற்சி மேற்கொண்டன. இது பாகிஸ்தான் அரசுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியது. ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு ஐநா மட்டுமின்றி, பாகிஸ்தானிலும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி பேட்டி அளித்த பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, ‘‘மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருக்கிறார். அவர் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டை விட்டு வெளியில் வரக்கூட முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக உள்ளது’’ என்றார். தீவிரவாதி மசூத் பாகிஸ்தானில் இருப்பதை அந்நாடு ஒப்புக்கொண்ட நிலையில், அதன் மீதான சர்வதேச நெருக்கடி அதிகரிக்கும் நிலையில், நேற்று மீடியாக்களில் பரபரப்பு தகவல் வெளியானது. பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மசூத் அசார் உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

மற்றொரு புறம், சர்வதேச நெருக்கடி வலுப்பதால், பாகிஸ்தான் அரசே மசூத் அசாரை கொன்று விட்டதாகவும் விரைவில் அது இயற்கை மரணமாக அறிவிக்கப்பட இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. அதே நேரம், பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த மசூத் அசாருக்கு ரகசிய இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், அந்த சிகிச்சை பலனின்றி கடந்த 2ம் தேதி இறந்து விட்டதாகவும், அதை இயற்கையான மரணமாக வெளி உலகுக்கு காட்ட பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருவதாகவும் பல கோணங்களில் தகவல் வெளியானது. இது குறித்து பாகிஸ்தான் அரசு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதே நேரம், இந்த தகவல்கள் குறித்து இந்திய உளவு அமைப்புகள் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related posts

Leave a Comment

three × one =