விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியா?

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று உசிலம்பட்டியில் நடந்த தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது. கூட்டணி தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக முக்கிய நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தியுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற குரல் தேமுதிகவுக்குள் எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று (மார்ச் 2) தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன்முடிவில், “யாருடன் கூட்டணி அமைத்தாலும் தேனி மக்களவைத் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும். தேமுதிகவின் நிர்வாகிகள் அனைவரும் அவரின் வெற்றிக்குத் துணை நிற்க வேண்டும்” என்று தீர்மானம் இயற்றியுள்ளனர்.

விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், பொது நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வது என விஜய பிரபாகரன் சில மாதங்களாகத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் அவருக்கு இளைஞரணி பதவி கொடுக்க வேண்டும் என்று தேமுதிகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது விஜய பிரபாகரன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரனிடம், தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “கேப்டன் கேட்டுக் கொண்டால் யாரை எதிர்த்து வேண்டுமானாலும் தேர்தலில் நிற்க நான் தயார். யாரைப் பார்த்தும் நான் பயப்பட மாட்டேன், எதற்கும் முடியாது என்று சொல்ல மாட்டேன்” என்று பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment

three × three =