ராயபுரத்தில் இன்று காலை தண்ணீர் லாரி டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அவர்கள் தண்ணீர் ஏற்ற மறுத்து லாரிகளை குடிநீரேற்று நிலையம் எதிரே நிறுத்தி வைத்து இருந்தனர்.
ராயபுரம்:
ராயபுரம், கல்லறை சாலையில் குடிநீரேற்றும் நிலையம் உள்ளது. இங்கிருந்து லாரிகள் மூலம் ராயபுரம், காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, மண்ணடி, பிராட்வே உள்ளிட்ட இடங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று இரவு பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த டிரைவர் ரவி தனது லாரியில் தண்ணீர் ஏற்றிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பழைய வண்ணாரப்பேட்டை மாடல் லைன் பகுதியைச் சேர்ந்த சிலர் அந்த லாரியில் இருந்து தங்களது குடங்களில் தண்ணீரை பிடித்தனர்.
இதனை டிரைவர் ரவி கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ரவியை தாக்கி சென்று விட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதனை கண்டித்தும், டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று காலை தண்ணீர் லாரி டிரைவர்கள் ‘திடீர்’ ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அவர்கள் தண்ணீர் ஏற்ற மறுத்து லாரிகளை குடிநீரேற்று நிலையம் எதிரே நிறுத்தி வைத்து இருந்தனர்.
ராயபுரம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனை ஏற்று டிரைவர்கள் ஸ்டிரைக்கை கைவிட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் காலை 9 மணி வரை குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது.