ஆக., 1 முதல், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அத்தி வரதர்!

”அத்தி வரதர் நின்ற கோலம் தரிசனத்திற்கு, பக்தர்கள் அதிகம் பேர் வருவர் என்பதால், கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களும் பலப்படுத்தப்படும்,” என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், அத்தி வரதர் வைபவம், 1ம் தேதி முதல் நடைபெறுகிறது. தற்போது, சயன கோலத்தில் இருக்கும் அத்தி வரதர், ஆகஸ்ட், 1ம் தேதி முதல், நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளார். அத்தி வரதர் நின்ற கோலத்தை காண, பக்தர்கள் அதிகம் வருவர் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர், பொன்னையா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: அத்தி வரதர் வைபவம், 28 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று, ஏகாதசி என்பதால், 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர், அத்தி வரதரை தரிசித்திருப்பர். காலை, கூட்டம் அதிகமாக இருந்ததால், பக்தர்களை தடுத்து நிறுத்தி, உள்ளே அனுப்பி வைத்தோம்; யாரையும் திருப்பி அனுப்ப வில்லை.

ஆக., 1 முதல், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அத்தி வரதரை காண, அதிகப்படியான பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல், போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப் படும். கோவில் வடக்கு மாட வீதியில், இரு இடங்களில், பெரிய பந்தல் அமைத்து, அதில், 20 ஆயிரம் பேரை தடுத்து வைத்து, பின், கோவிலுக்குள் அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக, 70 கழிப்பறைகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன; பிற வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன. ‘கூட்ட நெரிசலில் சிக்கி, சிலர் உயிரிழந்தனர்’ என, வதந்தி பரப்பி யுள்ளனர். வதந்தி பரப்புவோரை கண்டறிந்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

நேற்று காலையில் இருந்து, மாலை வரை, அத்திவரதரை காண கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டு, 31 பக்தர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும், அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்குள், ‘கூட்டத்தில் சிக்கி, நான்கு பேர் உயிரிழந்தனர்’ என, வதந்தி பரவியதால், கோவில் வளாகத்தில், பக்தர்கள் இடையே பீதி ஏற்பட்டது. இருப்பினும், பொது தரிசனத்தில் கூட்டம் குறையவில்லை.

Related posts

Leave a Comment