சர்வதேச மணல் சிற்ப போட்டியில் இந்தியாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் சாம்பியன்!

இந்தியாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு அமெரிக்காவில் வழங்கப்படும் ‘மக்களின் தேர்வு விருது’ வழங்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். இவர் நாட்டின் முக்கிய நிகழ்வுகளை மணல் சிற்பமாக உருவாக்கி, மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அமெரிக்காவின் பாஸ்டனில் ரிவெரி கடற்கரையில் சர்வதேச மணல் சிற்ப போட்டி நடைபெற்றது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து தலைச் சிறந்த மணல் சிற்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து சுதர்சன் மட்டுமே பங்கேற்றார்.

இந்த போட்டியில், ‘பிளாஸ்டிக் மாசுபாட்டில் இருந்து நமது கடலை காப்பாற்றுங்கள்’ என்ற தலைப்பிலான மணல் சிற்பத்தை சுதர்சன் உருவாக்கினார். கடலில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் மாசு, கடல் உணவுகள் மூலமாக மனிதனையும் பாதிக்கிறது என்பதை விளக்கும் வகையில் இந்த சிற்பம் அமைந்திருந்தது. இந்த சிற்பம் அமெரிக்காவின், ‘மக்களின் தேர்வு’ விருதை வென்றுள்ளது.

இந்த விருதுக்கு மக்கள் ஆன்லைன் மூலமாக வாக்களித்து சிறந்த கலைஞரை தேர்ந்தெடுப்பார்கள். அதன்படி, இந்த விருதுக்கு சுதர்சன் தேர்வு செய்யப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சுதர்சன் பட்நாயக் கூறுகையில், “இது எனக்கு கிடைத்த மிகவும் உயரிய விருது. அமெரிக்காவில் எனக்கு கிடைத்த கவுரவம்். பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்தியாவுக்கான விருது,” என்றார்.

Related posts

Leave a Comment