மகாபலிபுரத்தில் பிரதமர் – சீன அதிபர் சந்திப்பு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நம் இந்தியப் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்புக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று துவங்கி பிரதமர் சீன அதிபர் வந்து செல்லும் வரை மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து பாரம்பரிய சிற்ப வளாகங் களையும் மூட மாவட்ட கலெக்டர் பொன்னையா தொல்லியல் துறை கண்காணிப்பாளருக்கு பரிந்துரைத்துள்ளார்.

இந்தியா – சீனா இடையேயான முறைசாரா உச்சி மாநாடு வரும் 11,12 தேதிகளில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. அதில், பிரதமர் மோடி – சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் கலந்துகொண்டு இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இரு நாட்டுத் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள், குப்பைகள் அகற்றப்பட்டு, சுவர்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. மாமல்லபுரமே புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு நாட்கள் பயணமாக 11ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்னை விமானம் நிலையம் வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங், வரவேற்புக்குப் பிறகு கிண்டியிலுள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்று ஓய்வெடுக்கிறார். அதைத் தொடர்ந்து மாலை 4.10 மணிக்கு மாமல்லபுரம் செல்கிறார். பிரதமர் மோடி, அதற்கு முன்னதாகவே சென்னை வந்துசேருகிறார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்த்து உரையாடுகின்றனர். கடற்கரை கோயிலில் இரவு நடைபெறும் கலை நிகழ்ச்சியையும் கண்டுகளிக்கின்றனர்.

பின்னர் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குக்கு இரவு விருந்து அளிக்கிறார் பிரதமர் மோடி. 75 நிமிடங்கள் வரை நடைபெறும் இரவு விருந்தில், தலைவர்களைத் தவிர்த்து சில மூத்த அதிகாரிகள் மட்டும் கலந்துகொள்கிறார்கள். இதைத் தொடர்ந்து, சீன அதிபர் கிண்டி நட்சத்திர விடுதியில் இரவு தங்குகிறார்.

மறுநாள் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு இரு நாட்டுத் தலைவர்களும் மீண்டும் சந்தித்து உரையாடுகின்றனர். 40 நிமிடங்கள் நீடிக்கும் இந்தச் சந்திப்பில் இரு நாட்டு உறவுகள், வர்த்தக மேம்பாடு உள்ளிட்டவை குறித்து அப்போது விவாதிக்கப்படவுள்ளது. பின்னர், வங்கக் கடலை பார்த்தபடி அமைந்துள்ள ரிசார்ட் புல்வெளிகளில் இருவரும் உரையாடுகிறார்கள். இரண்டு நாட்களும் சுமார் 5 மணி நேரம் வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிகளில் இரு தலைவர்களும் 4 முறை சந்தித்துப் பேசுகின்றனர்.

இதைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் கலந்துகொள்ளும் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. மாமல்லபுரத்திலேயே இருவரும் மதிய உணவை முடித்துக்கொண்டு சென்னை வருகிறார்கள். பின்னர், ஜீ ஜின்பிங் மீனம்பாக்கம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சீனா புறப்பட்டுச் செல்கிறார். ஜீ ஜின்பிங் வருகையின்போதும் புறப்பாட்டின்போதும், சென்னையில் மற்ற விமானங்கள் தரையிறங்கவும் புறப்படவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று துவங்கி பிரதமர் சீன அதிபர் வந்துசெல்லும் வரை மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து பாரம்பரிய சிற்ப வளாகங்களையும் மூட மாவட்ட கலெக்டர் பொன்னையா தொல்லியல் துறை கண்காணிப்பாளருக்குபரிந்துரைத்துள்ளார்.

Related posts

Leave a Comment