மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ-வுக்காக மரங்களை வெட்டக் கூடாது – சுப்ரீம் கோர்ட்

மும்பையின் மையத்தில் அமைந்துள்ள ஆரே பகுதியில் இனி மரங்களை ஏதும் வெட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு  தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை ஆரே காலனி மரங்கள் நிறைந்த வனம் போன்ற ஒரு பகுதியாகும். இங்கு மூன்றாவது மெட்ரோ பணிமனையை அமைக்க ரயில்வே திட்டமிட்டிருந்தது. இதற்காக அப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி மெட்ரோ நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் மரங்களை வெட்ட அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து கடந்த வெள்ளியன்று மகாராஷ்டிரா அரசு மரங்களை வெட்டத் தொடங்கியது. இதை எதிர்த்து மாணவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என பலத் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது. இதில் 29 பேரை மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் ஆரே காலனியில் 144 தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை விதிக்க கேட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு டெல்லி சட்ட மாணவர்கள் கடிதம் எழுதினர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. வரும் 12ஆம் தேதி வரை தசரா பண்டிகை என்பதால் உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று சிறப்பு அமர்வு இந்த மனுவை எடுத்து விசாரித்தது.

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு, ” ஆரே காலனியில் மரம் வெட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இனிமேல் எந்த மரங்களையும் வெட்டக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்டது. ”போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் மனுதாரராகச் சேர்க்க வேண்டும். இதுவரை எத்தனை மரங்கள் வெட்டப்பட்டது என்பது குறித்து வரும் 21ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related posts

Leave a Comment