விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதில், 5, 12, 18, 28 என ஜி.எஸ்.டி நான்கு வரிகளாக பிரிக்கப்பட்டு அதன் படி பொருட்கள் வகைப்படுத்தப்பட்டன. இதில் சில அத்தியாவசிய பொருட்களுக்கும் மட்டும் ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டன.
இதனிடையே, பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் அமைக்கப்பட்டு பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் பெரும்பாலான பொருட்களுக்கான வரிகள் கிட்டத்தட்ட நிர்ணயம் செய்யப்பட்டு விட்டன.
ஜி.எஸ்.டி வரி அமல் செய்யப்பட்டு முதல் பல்வேறு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டது. வரி குறித்து மக்களுக்கும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. இதனால் எந்தப் பொருளுக்கு என்ன வரி என்று தெரியாமல் வியாபாரிகள் சொல்லும் வில்லைக்கு பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனை பயன்படுத்தி சிலர் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கும் வரி வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், தலைநகர் புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றிற்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்க கோரி வலியுறுத்தினார்.
கூட்டத்தை முடித்து சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயக்குமார், விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தில் 57 பொருட்களுக்கு வரி விலக்கு மற்றும் வரி குறைப்பிற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Related posts

Leave a Comment

ten + 15 =