வாஜ்பாயின் 95-வது பிறந்த நாள்: லக்னோவில் 25 அடி உயர சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95வது பிறந்தநாளையொட்டி, லக்னோவில் 25 அடி உயர வாஜ்பாய் சிலையை பிரதமர் மோடி திறந்து  வைத்தார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த  ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி காலமானார். இவரின் நினைவைப் போற்றும் வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய ராய்ப்பூரின் பெயரை அடல் நகர்’  எனப் பெயர் மாற்றம் செய்து அம்மாநில அரசு அறிவித்தது. மத்தியப் பிரதேச அரசு, வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளிப் பாடத்திட்டத்தில்  சேர்க்கப்போவதாகவும் தங்கள் மாநிலத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்போவதாகவும் அறிவித்திருந்தது. இதனை யடுத்து, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு வாஜ்பாய்க்கு தன்னுடைய மாநிலத்திலும் சிலை நிறுவப்படும் என   அறிவித்திருந்தார்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தலைமை செயலகமான லோக் பவனில் அவரது பிரம்மாண்ட சிலை  அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.89.6 லட்சம் மதிப்பில் வாஜ்பாய்க்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர வெண்கலச் சிலையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி  ராஜ் குமார் பண்டிட் வடிவமைத்துள்ளார். இந்த சிலையை பிரதமர் மோடி தற்போது திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து, வாஜ்பாயின் பெயரில் அமையவுள்ள மருத்துவப் பல்கலைக்கழகத் துக்கும் அடிக்கல்  நாட்டி உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, எங்கள் நோக்கங்கள் மலிவு சுகாதாரத்தை விரிவுபடுத்துதல் என்றார். பிரிவு 370, ராம் கோயில் பிரச்சினைகள் அமைதியாக தீர்க்கப்பட்டுள்ளன.பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கு வதற்கான வழி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 130 கோடி இந்தியர்கள் இத்தகைய சவால்களுக்கு நம்பிக்கையுடன் தீர்வு கண்டுள்ளனர். உ.பி.யில் எதிர்ப்பு என்ற பெயரில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள், அவர்கள் செய்தது சரியா என்று ஆராய வேண்டும் என்றும் பிரதமர் மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச ஆளுநர் அனந்தி பென் பாட்டீல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருவதால் வழக்கமான பாதுகாப்பு  ஏற்பாடுகளை விட கூடுதலாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள், டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment