சபரிமலையில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்!

சபரிமலையில் நாளை மறுதினம் மண்டலபூஜை நடைபெற உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 40 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 15-ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப் பட்டது. நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே தமிழகம், கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 26-ம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதற்காக கோயில் நடை 4 மணி நேரம் அடைக்கப்படுகிறது. மறுநாள் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் 26, 27 ஆகிய இரு நாட்களிலும் சபரிமலை வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தை கட்டுப்படுத்த நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய இடங்களில் பக்தர்களை தடுத்து நிறுத்தி சிறு குழுக்களாக சன்னிதானம் நோக்கி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment

fourteen + 6 =