புத்தாண்டில் கொடியேற்றத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தொடக்கம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா வருகிற புத்தாண்டு தினத்தன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குவது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில். சபாநாயகர் கோயில் எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் தேரோட்ட திருவிழா மற்றும் தரிசன விழா சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதத்துக்கான மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா வருகிற 1ம் தேதி புத்தாண்டு தினத்தன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கோயில் உத்சவ ஆச்சாரியார் சிதம்பர சபாபதி தீட்சிதர் கோயிலின் உள்ளே நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை துவக்கி வைக்கிறார். அதை தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

ஜனவரி 9ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு நான்கு மாட வீதிகளையும் வலம் வரும். அப்போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுப்பர். அன்று இரவு தேர் நிலைக்கு வந்தவுடன் நடராஜர் சிவகாமசுந்தரி சமேதம் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு லட்சார்ச்சனை நடைபெறும். 10ம் தேதி அதிகாலையில் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு ராஜசபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறும். பின்னர் பல்வேறு அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது.

இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக மதியம் 2 மணியளவில் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனம் ஆடியபடியே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பர். புத்தாண்டு தினத்தன்று நடைபெற உள்ள கோயில் கொடியேற்றம் மற்றும் தேரோட்டம், ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்பர்.

Related posts

Leave a Comment