ஆக்‌ஷன் கலந்த காமெடிப் படம்தான் ‘டகால்டி’ – டைரக்டர் விஜய் ஆனந்த் பேட்டி!

18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்த்த பிரபல திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி. செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள ” டகால்டி ” என்னும் முழுமையான காமெடி படம் இம்மாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது.

சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகக சார்ந்த முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகை சார்ந்த பிரம்மானந்தம், இந்திப் பட உலகை சார்ந்த தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, ராதாரவி, ரேகா, மனோபாலா, சந்தானபாரதி, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, என தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த டகால்டி குறித்து இயக்குநர் இயக்குநர் விஜய் ஆனந்த்- திடம் கேட்ட போது, “இது ஆக்‌ஷன் கலந்த காமெடிப் படம். ஜாக்கிசான் படங்களைப் போல சண்டைக் காட்சிகள் சுவாரஸ்யமாகவும் காமெடியாகவும் இருக்கும். கதையைப் பொறுத்தவரை இப்போதைக்கு சஸ்பென்ஸ். மற்றபடி இது டிராவலை அடிப்படையாகக் கொண்ட கதை.

சந்தானத்துக்கு இது புது களமாக இருக்கும். இதற்கு முன் அவர் பண்ணிய படங்களில் அவரைச் சுற்றி நிறைய கதாபாத்திரங்கள் வழியாகத்தான் கதை அமைந்திருக்கும். இதில் அவரை மட்டுமே சுற்றித்தான் கதை பின்னப்பட்டிருக்கும். அதுக்காக கெட்டப்பை மாற்றி செட்டப்பை மாற்றும் கனமான வேடம் கிடையாது.

வழக்கமான காமெடி கதையில் ஹீரோவுக்குரிய முக்கியத்துவம் உள்ள கேரக்டர். சுருக்கமா சொல்வதா இருந்தால் அவர் பாணியிலான படமாகவும் இருக்கும். அவர் பாணியிலிருந்து வேறுபட்ட படமாகவும் இருக்கும். படத்துல மும்பையில் வசிக்கும் தமிழராக வருகிறார். கேரக்டர் பெயர் குரு. ஓர் இயக்குநராக சந்தானத்தைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் அவரின் தொழில் பக்தி என்னை வியக்க வைத்தது. கதைக்காக தன்னை மிகவும் அர்ப்பணித்துக் கொள்வார். இயக்குநர் சொல்வதை மட்டுமே செய்வார். ஹீரோ பில்டப்புக்கு என்று எதையும் திணிக்க சொல்லமாட்டார். அதே போல் அவருடைய ஆலோசனையும் இயக்குநர் ஏற்றுக் கொள்கிற மாதிரி இருக்கும். பழகுவதில் டவுன் டூ எர்த். எங்கள் இருவருக்குமிடையே புரிதல் சரியாக இருந்ததால் வேகமாக படப்பிடிப்பை நடத்த முடிந்தது.

நடிப்பைப் பொறுத்தவரை காமெடி பண்ணுவதுதான் கஷ்டம். அதையே அவர் சரியாக பண்ணுவதால் மற்றவைகளை எளிதாகப் பண்ணுகிறார். சண்டைக் காட்சிகள் யதார்த்தமா இருக்கும். ஆக்‌ஷன், காமெடி என்று எல்லாமே கதைக்குள் இருக்கும். குடும்பமாக தியேட்டருக்கு வருபவர்களை அதிகமாக இந்தப் படம் எண்டர்டெயின் பண்ணுவது நிச்சயம்.

இப்படத்தின் நாயகி அழகா இருக்கா-ங்களே-ன்னு நெறைய பேர் ஆச்சரியமா கேக்கராங்க.. நாயகின்னாலே அழகாதானே இருக்கணும்? ரித்திகா சென். வங்காளத்துலே இருந்து மெரீனா கடற்கரைக்கு வந்திருக்கிறாங்க. தமிழில் இது தான் முதல் படம். நிறைய பெங்காலி படங்கள் பண்ணியிருக்காங்க. இந்தப் படத்துக்காக நிறையப் பேரிடம் ஆடிஷன் பண்ணினோம். ரித்திகாதான் எங்க கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தார். பிரமாதமா பெர்ஃபார்ம் பண்ணியிருக்கிறார். மொழிப் பிரச்சனைகளை கடந்து கேரக்டரை உள்வாங்கி நடிச்சிருக்காங்க.

இது போக யோகிபாபு ஃப்ரெண்ட் கேரக்டர் பண்ணியிருக்கிறார். சந்தானம், யோகி பாபு காம்பினேஷன் பிரமாதமா வந்துள்ளது. முக்கிய வேடத்தில் ராதாரவி, ரேகா, ஹேமந்த் பாண்டே, சந்தான பாரதி, மனோபாலா, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வானு நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல இந்தி நடிகர் வில்லனாக நடிக்கிறார். டிராவல் கதை என்பதால் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா என்று ஏராளமான மாநிலங்களில் எடுத்துள்ளோம்.”

மேலும் பின்னணிப் பாடகர் விஜய் நாராயணன் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அங்கிருந்துதான் எங்களுக்கு டியூன் வந்தது. கதைக்கு தேவையான பாடல்களை கார்க்கி கொடுத்துள்ளார். தீபக்குமார் பதி ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். ‘தில்லுக்கு துட்டு’, ‘பீட்சா-2’ உட்பட ஏராளமான படங்களில் வேலை பார்த்துள்ளார். ‘18 ரீல்ஸ்’ டாக்டர் எஸ்.பி.செளத்ரி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்

Related posts

Leave a Comment

17 − 15 =