ஆப்கானிஸ்தான்: கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சரி புல் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மாகாணத்தின் ஆளுநரான சபிநுல்லா அமானி இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்து இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.
மிர்ஸா ஒலங் பகுதியை ஒட்டிய சயாத் மாவட்டத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு சோதனை சாவடியில் கிளர்ச்சியாளர்கள் கொடூர தாக்குதல் நடத்தியதோடு 30-க்கும் அதிகமான வீடுகளுக்கு தீவைத்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும், அதிகபட்சம் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
அனைவரும் மிகவும் அருவறுக்கத்தக்க முறையில் மனிதாபமற்ற முறையில் கொல்லப்பட்டனர். இத்துடன் ஆப்கன் பாதுகாப்பு படையை சேர்ந்த ஏழு பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக மாகாண ஆளுநர் தெரிவித்தார். மேலும் தாக்குதலில் பலியானோர், காயமுற்றோர் சார்ந்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
இந்த தாக்குதலில் தலிபான் மற்றும் ஐ.எஸ். இயக்கத்தினர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டதாக அமானி தெரிவித்தார். எனினும் இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை என தலிபான்கள் மறுத்துள்ளனர். தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு படைகள் மற்றும் ஆப்கன் விமான படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாக்குதல் சம்பவங்கள் கடந்த சில காலங்களில் அதிகரித்துள்ளது. தினசரி அடிப்படையில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 1662 பேர் தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளனர், 3581 பேர் காமுற்றுள்ளனர், என ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment

20 − 11 =