மிரட்டும் வகையில் ‘த்ரோ’ செய்த ஜடேஜாவிற்கு 3-வது டெஸ்டில் தடை

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றுடன் முடிவடைந்த கொழும்பு டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஜடேஜா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உறுதுணையாக இருந்தார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. அத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடையும் கிடைத்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 183 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பாலோ-ஆன் ஆனதால் இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் விக்கெட் 7 ரன்னில் வீழ்ந்தது. 2-வது விக்கெட்டுக்கு கருணாரத்னே உடன் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தார்கள். அதிக அளவில் பந்து பவுன்சர், டர்ன் ஆகிய போதிலும் ஜடேஜா மற்றும் அஸ்வினால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இதனால் இருவரும் விரக்தியடைந்தனர்.

58-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் ஒரு பந்தை தடுத்தாடினார் கருணாரத்னே. அப்போது பந்து ஜடேஜா நோக்கி வந்தது. பந்தை பிடித்த ஜடேஜா மின்னல் வேகத்தில் கருணாரத்னே நோக்கி எறிந்தார். கருணாரத்னே சற்று விலகியதால் பந்து சகாவை நோக்கி சென்றது. சகா கையை பலமாக தாக்கிவிட்டு பந்து பறந்தது.

ஐ.சி.சி. விதிப்படி ஒரு வீரர் மற்ற வீரர்களை பயமுறுத்தும் வகையிலோ, மிரட்டும் வகையிலோ கிரிக்கெட் சம்பந்தமாக பொருட்களை தூக்கி வீசக்கூடாது. அப்படி வீசினால் அபராதம் விதிக்கப்படுவதுடன் போட்டி தடைக்கான புள்ளிகள் வழங்கப்படும்.  மைதான நடுவர்கள் இந்த சம்பவம் குறித்து போட்டி நடுவரிடம் தெரிவித்தனர்.

கொழும்பு டெஸ்ட் முடிந்ததும், இந்த போட்டிக்கான நடுவர் ரிச்சி ரிச்சார்ட்சன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது ஜடேஜா தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதனால் அவருக்கு தடைக்கான 3 புள்ளிகள் வழங்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் பந்து வீசிய பின்னர் அபாயம் எனக் கருதப்படும் பிட்ச் பகுதியில் நடந்ததால் தடைக்கான 3 புள்ளிகள் பெற்றார். தற்போது மிரட்டும் வகையில் பந்தை வீசியதால் மூன்று புள்ளிகள் பெற்றுள்ளார்.

24 மாதங்களுக்குள் 6 புள்ளிகள் பெற்றால் போட்டியில் தடைவிதிக்க விதிமுறை உள்ளது. தற்போது ஜடேஜா 6 புள்ளிகள் பெற்றுள்ளதால் பலேகலேயில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment

5 × 2 =