ஜெகன்மோகனின் கருத்து அவரது ‘சேடிஸ்ட்’ மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது: சந்திரபாபு நாயுடு

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் நந்தியால் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் பூமா நாகிரெட்டி. இவர் கடந்த மார்ச் மாதம் 12-ஆம் தேதி இறந்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதற்கிடையே, கர்னூல் மாவட்டத்தில் உள்ள நந்தியால் தொகுதியில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், ‘ஆந்திரப்பிரதேச மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சுட்டுக் கொல்ல வேண்டும். அவர் கலியுக ராட்சசனாக இருந்து வருகிறார்’ என குறிப்பிட்டார். இது ஆந்திராவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சியினர் போலீசில் புகார் செய்தும், பல இடங்களில் அவரது கொடும்பாவியை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களிடையே இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “என்னை சுட்டுக் கொல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறிய கருத்துக்கள் அவரது ’சேடிஸ்ட்’ மனோபாவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அவர் ஆட்சிக்கு வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் சுட்டுக் கொல்ல வேண்டும்? அடுத்து வரவுள்ள சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெறும் 30 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என கருத்துக் கணிப்புகள்
தெரிவிக்கின்றன. இதனால் தான் அவர் இவ்வாறு பேசி வருகிறார்’’ என தெரிவித்துள்ளார்.

 

Related posts

Leave a Comment