4 அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: தங்கதமிழ்செல்வன்

அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அண்மையில் 60 புதிய நிர்வாகிகளை கட்சிக்கு நியமித்தார். இதில் 20 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு பதவி கிடைத்தது.

பதவி கிடைத்தவர்களில் 4 எம்.எல்.ஏ.க்கள் முதலில் அதை ஏற்க மறுத்தனர். பின்னர் ‘திடீர்’ பல்டி அடித்து பதவியை ஏற்றுக் கொண்டனர்.

இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நியமனமே செல்லுமா, செல்லாதா என்று தேர்தல் கமி‌ஷனில் நிலுவையில் உள்ளது. கோர்ட்டிலும் நிலுவையில் உள்ளது.

இதுவே கேள்விக்குறி என்கிற போது இவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் பதவியும் கேள்விக்குறிதான் என்று கூறினார்.

இதுபற்றி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஆண்டிப்பட்டி தங்கதமிழ்ச் செல்வன் அளித்த பேட்டி வருமாறு:-

இந்த கட்சிக்கு பொதுச்செயலாளர் சசிகலாதான். துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்தான். இவர்கள்தான் கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்க அதிகாரம் பெற்றவர்கள்.

புதிய பதவிகள் கேள்விக்குறி என்று கூறும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மாநில மீனவரணி செயலாளர் பதவியை வழங்கியது யார்? சசிகலாதானே? அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொருளாளர் பதவி, செங்கோட்டையனுக்கு அவைத் தலைவர் பதவி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு மாவட்டச் செயலாளர் பதவி, வழங்கியதும் சசிகலா தான்.

இவர்களுக்கு இந்த பதவிகள் நிலைக்கும் போது இப்போது புதிதாக போடப்பட்ட பதவிகளும் நிலைக்கும். இதை மட்டும் எப்படி கேள்விக்குறி? என்று சொல்ல முடியும்.

இன்னும் சொல்லப்போனால் செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி தந்ததும் சசிகலா தான்.

எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் பதவி தந்ததும் சசிகலாதான்.

ஒட்டுமொத்த மந்திரி சபையில் உள்ளவர்களும் சசிகலா தயவால் நியமிக்கப்பட்டவர்கள்தான். இல்லை என்று மறுக்க முடியுமா? அப்போது சிரித்துக் கொண்டு ஓட்டு போட்டீர்களே?

உங்களுக்கு பதவி வந்தால் சரி என்கிறீர்கள். மற்றவர்களுக்கு கொடுத்தால் அதை கேள்விக்குறி என்கிறீர்கள்? இது முரண்பாடு இல்லையா?

அமைச்சர்களுக்கு கட்சிப் பதவிகள் நிலைக்கும் போது இப்போது மற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பதவிகளும் நிலைக்கத்தான் செய்யும்.

இதை மறுத்தால் அமைச்சர்களும் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டியது தானே? ஏன் ஒட்டு மொத்த மந்திரி சபையுமே ராஜினாமாதான் செய்ய வேண்டும்.

இந்த ஆட்சி புரட்சித் தலைவி அம்மா விட்டுச் சென்ற ஆட்சி. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆட்சி தொடர வேண்டும். அதில் மாறுபட்ட கருத்து இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Leave a Comment