13-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் வெங்கைய்யா நாயுடு

துணை ஜனாதிபதியாக கடந்த 10 ஆண்டுகளாக பதவியில் இருந்த ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது.

இதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய கடந்த 5-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரியாக இருந்த வெங்கைய்யா நாயுடு நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி களம் இறங்கினார்.

பாராளுமன்ற இரு சபை எம்.பி.க்களும் வாக்களித்தனர். அந்த தேர்தலில் வெங்கைய்யா நாயுடு தன்னை எதிர்த்து போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தியை விட கூடுதலாக 244 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார்.

இதையடுத்து துணை ஜனாதிபதியாக வெங்கைய்யா நாயுடு பதவி ஏற்கும் விழா இன்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடந்தது. முன்னதாக காலை வெங்கைய்யா நாயுடு ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கார், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்கினார்.

பிறகு ஜனாதிபதி மாளிகைக்கு அவர் வந்தார். காலை 10 மணிக்கு அங்கு நடந்த எளிய விழாவில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, அமித்ஷா, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும் அவர்கள் வெங்கைய்யா நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பதவி ஏற்றுக்கொண்டதும் வெங்கைய்யா நாயுடு உரையாற்றினார். அவர் கூறுகையில், பாராளுமன்ற மாநிலங்களவையை பயமின்றியும் பாரபட்சமின்றியும் நேர்மையான முறையில் நடத்தப் போவதாக கூறினார். மாநிலங்களவை மாண்பை காக்க தனக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மாநில முதல்வர்கள் வாழ்த்துகளை பெற்றுக்கொண்ட வெங்கைய்யா நாயுடு பிறகு தனது அலுவலகத்துக்கு சென்று ஆவணங்களில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கினார். இன்று பிற்பகல் அவர் பாராளுமன்ற மேல்சபை தலைவர் பதவியை ஏற்க உள்ளார்.

இதையொட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க மாநிலங்களவை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Related posts

Leave a Comment

9 + nine =