பவள விழா நிகழ்ச்சி மழையால் பாதியில் நிறுத்தம்

முரசொலி நாளிதழின் பவளவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சென்னை திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கத்தில், வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பவளவிழா பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று மாலை 5.45 மணி அளவில் பவளவிழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி தொடங்கியது. திறந்தவெளி மேடையில் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அமர்ந்திருந்தனர்.

இந்த கூட்டத்துக்கு, தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல்நலக்குறைவால் அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமையேற்று, க.அன்பழகனின் வாழ்த்து செய்தியை வாசித்தார். இந்தநிலையில், வானில் கருமேகங்கள் சூழ்ந்து தொடக்கத்தில் சாரல் மழை விழுந்தது. இதில் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் அனைவரும் நனைந்தபடியே, மேடையில் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் மழை பலமாக பெய்யத்தொடங்கியது.

இதையடுத்து, தி.மு.க. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியனை மு.க.ஸ்டாலின் அழைத்து  நிகழ்ச்சியை விரைந்து முடிக்கவேண்டும் என்று கூறினார். அதன்பின்னர், விழாவில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு கொட்டும் மழையிலேயே மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார்.

மழை மேலும் அதிகரித்ததால், மேடையில் இருந்தவர்களுக்கு குடை பிடிக்கப்பட்டது. கொட்டும் மழையிலேயே திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணும் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். முரசொலி பவளவிழா மலரை ஆர்.நல்லக்கண்ணு வெளியிட்டார்.

அதனை ‘முரசொலி’ முதல் மேலாளர் சி.டி.தட்சிணாமூர்த்தி பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து மழை பெய்ததால், ‘அனைத்து தலைவர்கள் சார்பாக, நல்லகண்ணு பேசுவார்’ என, ஸ்டாலின் அறிவித்தார்.

நல்லகண்ணு பேசுகையில், ”முரசொலி நாளிதழ், சமூக, அரசியல் மாற்றத்திற்கு, கருத்து ஆயுதமாக விளங்குகிறது. தற்போது, ஸ்டாலின் தலைமையில், சிறப்பாக நடந்து வருகிறது,” எனக்
கூறி, பேச்சை நிறைவு செய்தார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் கடைசியாக வாழ்த்துரை வழங்கி பேசியபோது, “முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் மழையால் ஒத்திவைக்கப்படுகிறது. இன்னொரு நாளில் இதைவிட சிறப்பாக, மீண்டும் பொதுக்கூட்டம் நடத்தப்படும். தற்போது வருகை தந்த தலைவர்களுக்கும், உங்களுக்கும் (தொண்டர்கள்) நன்றி” என்றார்.

இதையடுத்து 30 நிமிடங்களுக்குள் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்தது.

Related posts

Leave a Comment

seven − 2 =