அதிமுகவில் பிரிந்திருந்த பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று ஒன்றாக இணைந்தனர். ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராகவும், பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொதுக் குழுவை கூட்டி சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதனையடுத்து தினகரனுடன் ஆலோசனை நடத்தி வந்த அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று திடீரென தியானத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ் அணிகள் இணைப்பு குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மேலும், இன்று காலை ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். ஆளுநரை சந்திப்பதற்கான காரணம் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. இதனால், நீண்ட நாளாக நீடித்து வந்த பரபரப்பு நேற்று முற்று பெறாமலே போனது.
இந்நிலையில், ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது கூவாத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டதை நினைவுபடுத்துகிறது.
தற்போதையை நிலவரப்படி சுமார் 20 எம்.எல்.ஏ அதிருப்தியை வெளிப்படுத்தி கடுமையான நடவடிக்கையில் ஈடுபடும் பட்சத்தில் ஆட்சிக்கு ஆபத்து நிகழக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆளுநரை சந்திக்க உள்ளார்கள் என்பதால் எதிர்பார்ப்பு அதிக அளவு ஏற்பட்டுள்ளது.