இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்!

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு- இந்த தலைப்பிற்கும் தமிழ் நாட்டிற்கும் என்ன தொடர்பு என்று யோசிப்பவர்களுக்கு ஆரம்பத்திலேயே ஒரு ஆவணப்படத்தை எடுத்து அமைதிப் படுத்தி விட்டார் அதியன் ஆதிரை.

கடற்கரையில் ஒதுங்கிய குண்டு ஏன் காயிலாங்கடைக்கு செல்ல வேண்டும். அதை ஏன், தான் உண்டு தன் காதல் உண்டு என்று யோசிக்காமல் தன் டிரைவர் வேலையை நேசிக்கும் தினேஷ், பாண்டி சேரிக்கு எடுத்து செல்ல வேண்டும், அதை ஏன் ஆதிக்க வர்க்கம் அபகரிக்க முயற்சிக்க வேண்டும், அதே குண்டைப் பற்றி உலகத்திற்கு எடுத்து சொல்ல பொதுவுடைமை சமூகம் ஏன் முயற்சிக்க வேண்டும் என்று எந்த கேள்வியையும் மனதில் எழுப்ப விடாமல் கதையை நகர்த்தி சென்றிருப்பது இயக்குனரின் தனிச்சிறப்பு.

தினேஷ் மீண்டும் ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கயல் ஆனந்தி, முனீஷ்காந்த் ஆகியோரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் கம்யூனிச போராளியாக வரும் ரித்விகா பெயரைத் தட்டி செல்கிறார். இயக்குனர் தென்மாவின் இசை இப்படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் பல ரகம். ஒவ்வொன்றும் தனி ரகம். கேட்கும் காதுகளுக்கு புதுமை.

இயக்குனர் பா. இரஞ்சித் தயாரிக்கும் படம் என்றால், அதில் சாதியம் தூக்கலாக இருக்குமோ என்று சந்தேகிப்பவர்களுக்கு, கொஞ்சம் ஏமாற்றம் வரலாம். அதே சாதியத்தை பற்றி இந்த படம் பேசவில்லை என்று சொல்லி விடவும் முடியாது. அதை தாண்டி ஆணவக் கொலையைப் பற்றி இந்தப் படம் பேசுவது தனிக்கவனம் கொள்ள செய்கிறது.

இரண்டாம் பாதி படத்தின் வேகத்தை கொஞ்சம் தடை செய்கிறது. திரைக்கதையை கொஞ்சம் சீர் படுத்தி இருக்கலாம். மொத்தத்தில் இந்த குண்டு, நிச்சயமாக நடக்காது என்று நம்பினாலும் , ஒரு கற்பனையாக யோசித்தால் நெஞசையே உலுக்கும் உண்மையான வெடிகுண்டு…

Related posts

Leave a Comment