ஃபைண்டர் புராஜக்ட் 1 விமர்சனம்

எந்தக் குற்றமும் செய்யாமல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிரபராதிகளை கண்டறிந்து அவர்கள் வழக்கை மீண்டும் துப்பறிந்து உண்மையை வெளிக் கொண்டு வருவதன் மூலமாக அவர்களுக்கு விடுதலைப் பெற்றுத் தர முதுகலை குற்றவியல் பட்டதாரி மாணவர்களால் ஃபைண்டர் என்கின்ற ஒரு அமைப்பு துவங்கப்படுகிறது. அவர்கள் தங்களது முதல் வழக்காக மீனவக் குப்பத்தை சேர்ந்த பீட்டர் என்பவரின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். பீட்டர் யார்..? அவர் என்ன குற்றத்திற்காக எத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்கிறார்..? அவர் வழக்கின் பின்னணியில் உள்ள சதி என்ன என்பதை பேசுவதே இந்த “ஃபைண்டர் புராஜக்ட் – 1” திரைப்படத்தின் கதை.

மீனவ குப்பத்தில் தன் மகளை வருங்காலத்தில் ஆட்சியராக மாற்றிப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையுடன் வாழும் பீட்டர் என்னும் மீனவ கதாபாத்திரத்தில் சார்லி நடித்திருக்கிறார். தான் கடன்பட்டதை எண்ணி மீனவக் குப்பத்து மக்களிடம் கண்ணீருடன் வேண்டுகோள் வைக்கும் போதும், செண்ட்ராயனிடம் புலம்பும் போதும், என்ன செய்ததாக போலீஸிடம் சொல்ல வேண்டும் என்று வகுப்பு எடுக்கும் போது அதைக் கேட்டு நடுங்குவதிலும், என்னை விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, தாயில்லாத என் மகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கதறும் போதும் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ராயனாக வரும் செண்ட்ராயனுக்கு சார்லியின் மைத்துனன் மற்றும் சக கைதி கதாபாத்திரம், தன் மாமன் பட்ட கடனுக்காக கேஸ் வாங்கிக் கொண்டு ஜெயிலுக்குப் போய் வந்த பணத்தைக் கொடுப்பதும், போலீஸிடம் எப்படி கொலை செய்தோம் என்பதை விளக்கும் போது உண்மையாகவே செண்ட்ராயன் தான் கொலை செய்தாரோ என்று நம்பும்படியான உடல்மொழியும் அவரை ஒரு தேர்ந்த நடிகனாக நம் கண்ணில் காட்டுகிறது.

மீனவக் குப்பத்து இளம் பெண்ணாக வரும் ப்ரனா அப்துல்சலாம் அறியாமையையும் தகப்பன் மற்றும் தாயைப் பிரிந்த வலியையும் படம் முழுக்க தன் முகத்தில் தேக்கி வைத்து நடித்திருக்கிறார். தன் அப்பாவிற்கு என்ன நடந்தது என்பதை விளக்கும் இடத்தில் மிகையற்ற நடிப்பை வழங்கி கவனம் ஈர்க்கிறார்.

முதன்மை பெண் துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தாரிணி ரெட்டி அவரின் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை உணர்ந்து செய்திருக்கிறார்.

அரசு தரப்பு வழக்கறிஞராக வரும் நிழல்கள் ரவி, கோபிநாத் சங்கர், நாசர் அலி போன்றோரும் நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

முதல் படத்திலேயே சமூகத்திற்கு தேவையான, சமூக அக்கறையுடன் கூடிய ஒரு கதையை எடுத்திருக்கிறார் இயக்குநர் வினோத் ராஜேந்திரன். இப்படத்தில் முதன்மையான துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு அல்லாமல் ரஹீப் சுப்ரமணியத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

பேபி ஆண்டனியின் ஒளிப்பதிவும் நீதிமன்றக் காட்சிகளும், பழவேற்காடு ஏரி தொடர்பான காட்சிகளும், கடற்கரையோரக் காட்சிகளும் அழகியலோடு படமாக்கப்பட்டிருக்கின்றன. சூர்ய பிரசாத்தின் இசையும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருந்து திரில்லர் படங்களுக்குத் தேவையான மாயத்தன்மையை வழங்கி இருக்கின்றன.

படத்தின் முதல்பாதி வழக்கு, வழக்குக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யங்கள், மர்மங்கள், முடிச்சுகள், விசாரணை என பரபரப்பாக செல்கிறது. இரண்டாம்பாதி சாமியார், பினாமி, ரெய்டு, பணப்பிரச்சனை என்று சற்று பழக்கமான ரூட்டில் பயணப்படுகிறது.

இருப்பினும் சமூகத்திற்கு மிக முக்கியமான, அதே வேளையில் இதுவரை பெரும்பாலும் திரைப்படங்கள் வாயிலாகப் பேசப்படாத பிரச்சனையை குறைந்தபட்ச சுவாரஸ்யத்துடன் கொடுத்த வகையில் ஃபைண்டர் அத்தியாயம் – 1 கவனம் பெறுகிறது.

ஃபைண்டர் அத்தியாயம் – 1 – கவனிக்கப்பட வேண்டிய திரைப்படம்

மதிப்பெண் – 2.75 / 5.0

 

 

Related posts

Leave a Comment