ஒரு நொடி விமர்சனம்

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பல்லாயிரம் நொடிகளால் ஆனது. அதில் ஒரு நொடி நம் வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றிப் போடும் ஆற்றல்மிக்கதாக இருக்கிறது என்கின்ற கருத்தை வலியுறுத்தும் திரைப்படமே இந்த “ஒரு நொடி” திரைப்படம்.

தன் கணவர் சேகரனை (எம்.எஸ்.பாஸ்கர்) காணவில்லை என்று ஒரு இரவு நேரத்தில் வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார் சகுந்தலா (ஸ்ரீரஞ்சனி). அதுமட்டுமின்றி தன் கணவருக்கும் கரிமேடு தியாகு (வேல ராமமூர்த்தி) –வுக்கும் இடையில் நிலப்பத்திரம் தொடர்பான பிரச்சனை இருப்பதையும் கூறி தனக்கு அவர் மீது சந்தேகம் இருக்கிறது என்று கூறுகிறார். இளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறன் (தமன்குமார்) சேகரன் காணாமல் போன வழக்கின், முதல் சந்தேகப் பார்வையை கரிமேடு தியாகுவின் மீது வைத்து அந்த வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார். அந்த விசாரணையின் போதே மற்றொரு இளம்பெண் ஒருவரும் மர்மமான முறையில் இறந்து போகிறார். அந்த வழக்கையும் விசாரிக்கத் துவங்கும் பரிதி இளமாறன், ஒரு கட்டத்தில் இரண்டு வழக்கிலும் எந்த தடயமும் கிடைக்காமல் முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டவர் போல் முழி பிதுங்கி நிற்கிறார். மேற்கொண்டு அந்த வழக்கை அவர் எப்படி விசாரிக்கத் துவங்கினார். விசாரணை வழக்கை எங்கே கொண்டு சென்றது. மாயமான சேகரனுக்கும் மரணமான இளம்பெண்ணுக்கும் என்னதான் நடந்தது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

பரிதி இளமாறன் கதாபாத்திரத்தில் தமன்குமார் கச்சிதமாகப் பொருந்துகிறார். விசாரணையின் போது அவர் எம்.எல்/.ஏ-வாக வரும் பழ.கருப்பையாவிடமும் அவரின் கையாளாக வரும் வேல.ராமமூர்த்தியிடமும் காட்டும் தெனாவட்டு ரசிக்க வைக்கிறது. புத்திசாலித்தனமும் மனிதாபிமானமும் கலந்து அவர் விசாரணையை நகர்த்திச் செல்லும் விதம் படத்திற்கு மேலும் சுவாரஸ்யத்தைக் கொடுக்கிறது. இனி நல்ல நல்ல வாய்ப்புகள் தொடர்ச்சியாக தமனுக்கு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. வாழ்த்துக்கள்.

சில நிமிடங்களே வந்து செல்லும் சேகரனாக எம்.எஸ்.பாஸ்கர் மனதில் நிற்கிறார். கிடைத்த சின்ன சின்ன இடங்களிலும் நடிப்பில் ஸ்கோர் செய்து அட்டகாசப்படுத்துகிறார்.

கரிமேடு தியாகு கதாபாத்திரத்தில் வேல.ராமமூர்த்தி மிரட்டியிருக்கிறார். கைது செய்து கஸ்டடியில் வைத்திருக்கும் போது அந்த திமிர் பேச்சையும் தெனாவட்டையும் அடாவடியையும் விட்டுவிடாத உடல்மொழியும் நடிப்பும் படத்தின் திரைக்கதைக்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. எம்.எல்.ஏ-வாக வரும் பழ.கருப்பையாவும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் அறிந்து செவ்வனே நடித்திருக்கிறார். தனக்கு கீழான ஒரு இன்ஸ்பெக்டர் தன் பேச்சை மதிக்காமல் பேசுகிறான் என்றதும் அவருக்குள் ஏற்படும் அந்த ஆக்ரோசம் அட்டகாசம்.

காணாமல் போன கணவனைத் தேடும் மனைவியாக ஸ்ரீரஞ்சனி நடித்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கரின் நண்பனாக வரும் கஜராஜ் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பொன்னுத்தாயாக தீபா சங்கர் நடித்திருக்கிறார். இறந்து கிடக்கும் தன் மகளின் உடலைப் பார்த்து பதைபதைக்கும் இடங்களில் தன் நடிப்பால் நெஞ்சை உறையச் செய்கிறார், இறந்த பெண்ணின் தகப்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் அழகர் இயல்பான முக பாவனைகளில் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

கே.ஜி.ரதிஷ் ஒளிப்பதிவாளராக மட்டுமின்றி வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் மூலம் படத்தின் இணைதயாரிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரின் ஒளிப்பதிவில் காட்சிகளில் திகிலும் மர்மமும் ஒருங்கே சட்டகங்களில் குடியேறியிருக்கின்றன. சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை படக் காட்சிகளுக்கு தேவையான சஸ்பென்ஸை கொடுத்து உதவி இருக்கிறது. படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசி காட்சி வரை திகிலூட்டும் அனுபவத்தை குறைவில்லாமல் தன் இசையின் மூலம் கடத்தியிருக்கிறார். பாடல்களில் ஜெகன் கவிராஜ் வரிகளில் வரும் ”கொல்லாதே” பாடலும் பாடல் வரிகளும் கவனம் கோருகின்றன.

ஜி.குருசூர்யாவின் எடிட்டிங்கில் எந்த நெருடலும் இல்லை. மதுரை அழகர் மூவிஸ் சார்பாக அழகர் குருசாமி படத்தினை தயாரித்திருக்கிறார். தனஞ்ஜெயன் இப்படத்தினை தமிழகமெங்கும் வெளியிட்டிருக்கிறார்.

பி.மணிவர்மன் எழுதி இயக்கி இருக்கிறார். எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும் எதிர்பாராத யதார்த்தமான ஒரு சம்பவத்தை எடுத்துக் கொண்டு, அதன் மீது ஒரு த்ரில்லர் கதைக்கான கட்டமைப்பை கனகச்சிதமாக உருவாக்கியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே கதை துவங்கிவிடுவது சிறப்பு. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களும் காட்சிகளும் திரைக்கதையை பரபரவென நகர்த்த பயன்பட்டிருக்கிறது. சேகரனுக்கு என்ன ஆனது என்கின்ற ஒற்றை கேள்வியை நோக்கி ஓடும் திரைக்கதை எங்கும் சோர்வு தட்டாமல் திகுதிகுவென ஓடுகிறது.

இளம்பெண் மரணம் நிகழ்ந்த பின்னர் சேகரன் வழக்கில் ஒரு தேக்கம் ஏற்பட்டது போன்ற தோற்றம் கிடைத்தாலும் அடுத்தடுத்து உடையும் விசாரணை வளையங்கள் ஒட்டுமொத்த கதைக்குமான தொடர்பை உரக்க தெரிவித்துவிடுகின்றன.

அந்த க்ளைமாக்ஸ் காட்சி ஒரே நேரத்தில் வியப்பையும் ஆச்சரியத்தையும் கொடுக்கிறது.

த்ரில்லர் வகை கதையை விறுவிறுப்பாக கையாண்ட விதத்தில் பி.மணிமாறன் ஒரு நொடியில் ஜெயித்திருக்கிறார்.

ஒரு நொடி – மதிப்புமிக்கது.

மதிப்பெண் 3.0 / 5.0

 

Related posts

Leave a Comment