வல்லவன் வகுத்ததடா விமர்சனம்

ஐந்து வேறுவேறுவிதமான கதாபாத்திரங்களைக் கொண்டு ஹைபர் லிங்க் திரைக்கதை யுக்தியின் மூலமாக சொல்லப்பட்டிருக்கும் கதை தான் இந்த வல்லவன் வகுத்ததடா திரைப்படம்.

 

திருட்டை தொழிலாகக் கொண்ட இரண்டு இளைஞர்கள், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக காதலை பயன்படுத்தி ஏமாற்றும் இளம்பெண், லஞ்சப் பணத்தை கோயிலுக்கான உண்டியலில் செலுத்தச் சொல்லி வசூல் வேட்டை நடத்தும் போலீஸ் அதிகாரி, வட்டிக்கு பணம் கொடுத்து பணத்தை திரும்ப செலுத்தாதவர்களிடம் உடல் உறுப்புகளை உருவிக் கொள்ளும் பைனான்சியர், இவர்களோடு தன் குடும்பத்தையும், மருத்துவமனையில் இருக்கும் அப்பாவின் உயிரையும் காப்பாற்ற போராடும் மற்றொரு இளம்பெண். இந்த ஐவரும் வேறு வேறு சூழ்நிலைகளில் ஒருவரையொருவர் எதிர்கொள்ள அந்த சந்திப்பு அவர்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை சிறப்பான திரைக்கதை உத்தியோடு பேசியிருக்கிறது ‘வல்லவன் வகுத்ததடா திரைப்படம்.

திருடர்களாக நடித்திருக்கும் தேஜ் சரண்ராஜ் மற்றும் ரஜின் ரோஸ் இருவரும் இன்னும் சற்று சிறப்பாக நடித்திருக்கலாம். இவர்கள் அறிமுகம் ஆகும் அந்தக் காட்சியில் துவக்கமே அவர்கள் மீது சந்தேகம் வருவது போல் தான் அமைந்திருக்கிறதா..? இல்லை அமைக்கப்பட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. அவர்கள் திருடர்களாக மாறும் அந்த நொடி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியை ஒட்டி இருவருமே சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். பெயர் விளக்கம் கொடுக்கும் போதே இதைக் கொண்டு ஏதோவொன்று நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடிகிறது.

காதல் என்கின்ற போர்வையில் ஆண்களை தன் வலையில் வீழ்த்தி ஏய்க்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் அனன்யா. அனன்யா வட்டிக்கு விடும் தொழிலதிபர் மற்றும் போலீஸ் அதிகாரி இருவரிடமும் மாட்டிக் கொள்ளும் இடமும், இரண்டு கொள்ளையர்களை பின் தொடரும் இடமும் திரைக்கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்ட உதவி புரிந்திருக்கின்றன.

போலீஸ் அதிகாரியாக வரும் ராஜேஷ் பாலச்சந்திரனின் கதாபாத்திர வார்ப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்த திரைப்படத்திலும் மனதில் நிற்கும் கதாபாத்திரமாக மிளிர்கிறார். அவர் வஞ்சகத்துடன் சிரிக்கும் அந்த சிரிப்பு அந்த கதாபாத்திரத்தின் மீதான எதிர்மறைத்தன்மையை அதிகரிக்க பயன்பட்டிருக்கிறது. மேலும் தன் ஹேர் ஸ்டைலை கரெக்ட் செய்து கொள்ளும் மேனரிசமும் அந்த கதாபாத்திரத்திற்கு புதிய அடையாளம் கொடுக்கிறது. காசு தான் என் உயிரைக் காத்தது என்கின்ற அவரின் கவுண்டர் வசனமும், அதற்கு நேர் எதிரான இறுதிக் காட்சி நிகழ்வும் கொஞ்சம் எதிர்பார்த்தது தான் என்றாலும் திரையில் நிகழும் போது சுவாரஸ்யத்தை அளிக்கத் தவறவில்லை.

வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்சியராக வரும் விக்ரம் ஆதித்யா, மற்றும் அவரின் ஒற்றை அடியாள் ஆகியோர் மிகுந்த நம்பகத்தன்மையை ஏற்படுத்த தவறுகின்றனர். அதிலும் குறிப்பாக அந்த ஒற்றை அடியாள் கதாபாத்திரம் அவரோடு சேர்த்து பைனான்சியர் கதாபாத்திரத்தையும் காலி செய்கிறது. நடக்கும் நிகழ்வுகளுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் நிற்கும் அந்த உடல்மொழி காட்சியின் மீதான நம்பகத்தன்மையை கெடுத்துவிடுகிறது. விக்ரம் ஆதித்யா முடிந்த அளவு சிறப்பாக நடித்திருக்கிறார். அவரிடம் இருந்து அனன்யா அந்த நகையை திருடிச் செல்லும் அந்த நிமிடங்களில் திரைக்கதை பரபரக்கிறது.

பெண் டாக்ஸி ஓட்டுநராக குடும்பத்திற்காக கஷ்டப்படுபவராக வரும் சுவாதி மீனாட்சி மீது இயல்பாக பார்வையாளர்களின் கரிசனை ஒட்டிக் கொள்கிறது. அவரது குடும்பம் தொடர்பான காட்சிகள் மிகுந்த நாடகத்தனத்துடன் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தாலும் கூட, கடைசிக் காட்சியில் அவர்களின் தேவை நிறைவேறும் போது பார்வையாளர்கள் மனக்களிப்பு அடைவது உண்மை.

இந்த ஐந்து நபர்களுக்கு இடையேயான பணத் தேவைக்கான ஆடுபுலி ஆட்டத்தில் யார் ஆடு யார் புலி –யாக மாறுவார்கள் என்பதான நொடி திரைக்கதையின் வீரியத்திற்கு சான்று பகர்கிறது. ஆனால் க்ளைமாக்ஸ் என்பது முன்னரே யூகித்த ஒன்றாகவே முடிந்து போகிறது. கெட்டவன் அழிவான்; நல்லவன் வாழ்வான் என்பதான பொதுமை பிம்பத்திற்குள் கடைசி நொடியில் கதை சிக்கிக் கொள்கிறது.

கீதா உபதேசத்தின் வரிகளை ஒவ்வொரு கதைக்குமான தலைப்பாக பயன்படுத்திய உக்தி ரசிக்கக்கூடியதாக இருந்தாலும் கதைக்கு பொருத்தமானதாக இருக்கவில்லை. கர்ணன் படப்பாடலான ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலின் வரிகளாம் “வல்லவன் வகுத்ததடா” என்பதை தலைப்பாக பயன்படுத்தி இருப்பது கீதா உபதேசத்துடன் பொருந்திப் போனாலும் கதையோடு எந்தளவிற்கு பொருந்துகிறது என்று தெரியவில்லை.

என்னதான் பணம் கொள்ளையடித்து செல்வ செழிப்பாக வாழ்ந்தாலும் கெட்டவர்கள் இறுதியில் வீழ்வார்கள். நல்லவர்கள் துன்பங்கள் பல அனுபவித்தாலும் இறுதியில் அந்த துன்பங்களை வென்று வாழ்வார்கள் என்பதே இப்படத்தின் அடிநாதம். அது இன்றைய சித்தாந்தத்திற்கு பொருந்துமா என்றும் தெரியவில்லை.

கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவு காட்சிக்கு தேவையானதை செய்திருக்கிறது. அந்த ஒளியமைப்புகளும் கேமரா கோணங்களும் சில இடங்களில் பட்ஜெட் திரைப்படம் என்பதை சொல்லாமல் சொல்கின்றன. சகிஷ்னா சேவியரின் பின்னணி இசை திரில்லர் காட்சிகளில் சிறப்பாகவும் ப்ளாக் க்யூமர் காட்சிகளில் பழமையுடனும் ஒலிக்கிறது. அஜயின் படத்தொகுப்பில் சலிப்பில்லை என்பதே வெற்றிதான்.

போக்கஸ் ஸ்டுடியோஸ் சார்பாக விநாயக் துரை எழுதி இயக்கி இருக்கிறார். ஒரு ஹைபர் லிங்க் கதையை எடுத்துக் கொண்டு அதை எந்த அளவிற்கு சுவாரஸ்யத்துடன் திரையில் காட்ட முடியுமோ அந்த அளவிற்கு காட்டியிருக்கிறார். ஒரு சில நடிகர் நடிகைகளின் செயற்கைத்தனமான நடிப்பு, நாடகத்தனமான சில காட்சிகள், முன்னமே யூகிக்கக்கூடிய க்ளைமாக்ஸ் போன்றவை பலவீனமாக இருந்தாலும், இந்த ஐந்து கதாபாத்திரங்களும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் சூழலையும் அடுத்து அவர்களுக்குள் என்னவெல்லாம் நடக்கலாம் என்பதான மர்மத்தையும் தக்க வைத்துக் கொண்டதில் திரைக்கதை ஜெயித்து வல்லவன் வகுத்ததடா திரைப்படத்தை காப்பாற்றுகிறது.

”வல்லவன் வகுத்ததடா” – சிறந்த முயற்சி.

 

 

Related posts

Leave a Comment