ஹீரோ விமர்சனம்!

தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்ற ஒரு பேச்சு வழக்கு உண்டு, அப்படி அந்த தேவையை கண்டுபிடிப்பவரை அழிக்காமல் அவரது அறிவையும், அவர்கள் அறிவை வளர்க்க உதவி செய்யும் பேரறிவாளனையும் அழிக்க முயற்சி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளை, திருட்டுத்தனம் பண்ணி திருந்திய ஒருவன் எப்படி எதிர் கொண்டு காப்பாற்றுகிறான் என்பதே இந்த ஹுரோ படத்தின் ஒரு வரிக்கதை.

ஆசிரியராக வரும் அர்ஜுன், மார்க் வாங்காத மக்கு மாணவர்கள் என்று புறந்தள்ளப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்கள் இவர்களுக்கு இடையில் சிவகார்த்திகேயன் எப்படி நுழைந்தார் என்பது இயக்குனரின் கைவண்ணம். கார்ப்பரேட் கைக்கூலியாக வரும் அபய் தியோல் அசால்ட்டாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார். அரவிந்த் சாமி பின் குரல் கொடுத்தது கூடுதல் பலம். புது முகம் கல்யாணி ப்ரியதர்ஷன் இயல்பாக நடித்திருப்பது இனிமை. ஜார்ஜ் வில்லியம்ஸ்ன் ஒளிப்பதிவு மிக அருமை. யுவனின் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னனி இசை பெரும் பலம்.

இக்கதைக்கு இயக்குனர் உட்பட நான்கு எழுத்தாளர்கள் வசனம் எழுதியருப்பதாலோ என்னவோ சில இடங்களில் கைதட்டல்களையும், சில இடங்களில் கடுபபையும், சில இடங்களில் நகைப்பையும் தருகிறது. ஆனாலும் ஒரு கதைக்கு எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது பாராட்டுக்குரியது. திரைக்கதையில் விறுவிறுப்பு வேண்டும் என்பதற்காக லாஜிக் என்ற ஓட்டை, ஒடிசல்களை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது.

இருந்தாலும் கல்வி துறை நிறுவனங்கள் நம்மை எப்படி எல்லாம் மூளை சலவை செய்து, படைப்பாற்றவலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சொகுசு வாழ்க்கைக்கு பழக்கப்படுத்துகின்றன என்று சாட்டையடித்தால் எப்படி தோலுரியும் என்பது போல தோலுரித்து காட்டியிருக்கும் ‘இரும்புத்திரை’ இயக்குனர் மித்ரனை பாராட்டாமல் இருக்க முடியாது.

சிவகார்த்திகேயன் நாளுக்கு நாள் நடிப்பில் மெருகேறுகிறார். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார், இருந்தாலும் அர்ஜுனே ஹீரோவாக தெரிகிறார். ஐம்பதைக் கடந்த பிறகும் ஆக்ஷனில் மிரட்டுவது ஆக்ஷன் கிங்க்கு மட்டுமே உரியது. இதற்கு தனித்துவம் அளித்திருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு ஜென்டில்மேன். மொத்தத்தில் ஹுரோ படமல்ல, பெற்றோர்களுக்கு சொல்லியிருக்கும் ஒரு பாடம்.

Related posts

Leave a Comment

three + 14 =