ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
‘டாடா’ போன்ற வெற்றித் திரைப்படங்களின் தயாரிப்பாளரான எஸ். அம்பேத் குமார் அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்து வருகிறார். ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘ஃபர்ஹானா’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் ‘டிஎன்ஏ’ படத்தை இயக்கியுள்ளார். திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு தரப்பு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
தன் கதை மீதும் தன் மீதும் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் படம் பற்றி பேசுகையில், “‘டிஎன்ஏ’ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கதையை சொன்னபடியே படமாக்கியதில் தயாரிப்பாளர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். அதர்வா முரளி இந்தப் படம் முடியும் வரை எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். என் கரியரின் ஆரம்ப காலத்தில் அதர்வாவின் படங்களில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவர் என் கதையைக் கேட்காமலேயே நடிக்க ஒத்துக் கொண்டது மகிழ்ச்சி. ‘டிஎன்ஏ’ திரைப்படம் அவரது கரியரில் நிச்சயம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த படத்தில் நிமிஷா சஜயன் திறமையாக நடித்துள்ளார். இது பலருக்கும் சவாலான கதாபாத்திரமாக இருக்கும். ஆனால், நிமிஷா அதைத் திறமையாகக் கையாண்டுள்ளார். படத்தைப் பார்வையாளர்களுக்காக திரையில் கொண்டு வர ஆர்வமாக இருக்கிறோம்” என்றார்.
க்ரைம்-ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அதர்வா முரளியை புதிய தோற்றத்தில் பார்க்கலாம். இது அதர்வாவின் ரசிகர்களுக்கு நிச்சயம் ட்ரீட்டாக இருக்கும். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் திரையரங்கு வெளியீடு பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்க, விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் தவிர, இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவின் சைவி, சாஹி சிவா மற்றும் அனல் ஆகாஷ் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் 5 பாடல்களுக்கு இசையமைத்திருப்பது படத்தின் தனிச்சிறப்பு.
‘டிஎன்ஏ’வை ஒலிம்பியா மூவீஸின் எஸ் அம்பேத் குமார் வழங்குகிறார் மற்றும் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார்.