ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன்

நடிகை, கூத்து கலைஞர், மேடை நாடகக் கலைஞர், யூட்யூப் பிரபலம் எனப் பன்முகத் திறமையுடன் வலம் வரும் மாயா எஸ். கிருஷ்ணன், தற்போது ஸ்டாண்ட் அப் காமெடி கலைஞராகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

சென்னை மியூசிக் அகாடமியில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை நடைபெற்ற அவரது ‘பொம்ப்ளேள்’ ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ, இதற்கு சாட்சியாக அமைந்தது. குறிப்பாக, 1,500 இருக்கைகள் கொண்ட அரங்கம் நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முழுமையாக விற்றுத் தீர்ந்த நிலையில், மியூசிக் அகாடமியில் புதிய வரலாற்றை மாயா எஸ். கிருஷ்ணன் உருவாக்கியுள்ளார். நிகழ்ச்சி நாளன்று அரங்கம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பியது.

மஞ்சுளா டீச்சர்’ என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் மூலம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவும் பாகுபாடு, பாரபட்சம், வெறுப்பு பிரச்சாரம் மற்றும் ஆதிக்க மனப்பான்மை போன்றவற்றை நையாண்டி கலந்து பேசும் அவரது டிஜிட்டல் வீடியோக்களும் பரவலான வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை 7 மணிக்கு சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற ‘பொம்ப்ளேள்’ நிகழ்ச்சியில், மாயா எஸ். கிருஷ்ணன் தனி ஆளாக மேடையை ஆக்கிரமித்து பார்வையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.

நடிப்பு மற்றும் திரை அனுபவங்களுடன், கூத்து மற்றும் மேடை நிகழ்த்துக் கலைகளில் பெற்ற அனுபவத்தையும் தனது நகைச்சுவை நிகழ்த்தலில் திறம்படப் பயன்படுத்தி வரும் மாயா, பார்வையாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடும் தனித்துவமான மேடை மொழியை உருவாக்கியுள்ளார்.

ஒரு தருணத்தில் அரங்கமே சிரிப்பால் அதிர, அடுத்த கணமே மாயாவின் எதிர்பாராத நையாண்டி வசனத்தில் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் மூச்சை இழுக்கும் நிலை; அதன் பின்னர் மஞ்சுளா டீச்சருடன் இணைந்து பாடி, ஆடி ரசிகர்கள் கொண்டாடும் தருணம் என நிகழ்ச்சி முழுவதும் ஒரே மாதிரியான அனுபவமாக இல்லாமல், தொடர்ந்து புதுப்புது உணர்வுகளை பார்வையாளர்களுக்கு வழங்கியது.

சிரிப்பு முதல் அதிர்ச்சி வரை, அதிர்ச்சியிலிருந்து கொண்டாட்டம் வரை — ‘பொம்ப்ளேள்’ பார்வையாளர்களை வெறுமனே அமர வைத்து பார்த்த நிகழ்ச்சி அல்ல; அவர்களையும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாற்றிய மேடை அனுபவம்.மஞ்சுளா டீச்சருடன் பார்வையாளர்கள் இணைந்து பாடியதும், ஆடியதும், அரங்கமே ஒரு கட்டத்தில் காமெடி ஷோவைத் தாண்டி ஒரு கொண்டாட்டக் களமாக மாறியதும் நிகழ்ச்சியின் மறக்க முடியாத தருணங்களாக அமைந்தன.

இதனால், சிரிக்கவும், அதிர்ச்சியடையவும், சிந்திக்கவும், பாடவும், ஆடவும் வைத்த ஒரு முழுமையான ‘கூத்து’ அனுபவமாகவே ‘பொம்ப்ளேள்’ அமைந்தது.

மஞ்சுளா டீச்சர்’ என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் மூலம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவும் பாகுபாடு, பாரபட்சம், வெறுப்பு பிரச்சாரம் மற்றும் ஆதிக்க மனப்பான்மை போன்றவற்றை நையாண்டி கலந்து பேசும் அவரது டிஜிட்டல் வீடியோக்களும் பரவலான வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இதனிடையே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த ‘பொம்ப்ளேள்’ நிகழ்ச்சியை மாயா எஸ். கிருஷ்ணன் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பயணித்து, இதனை அரங்கேற்றவிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. 

Related posts

Leave a Comment