சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கும் டூர் போக தயாரா?

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனிநபர்களையும் சுற்றுலா அழைத்து செல்லும் வர்த்தகத்தை துவக்க உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

இதுவரை விண்வெளி ஆராய்ச்சியாளர்களை மட்டும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்து சென்ற நாசா, இனி தனிநபர்களையும் சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. முதல் சுற்றுலா பயணத்தை அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்கவும் நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நாசா நேற்று (ஜூன் 07) அன்று வெளியிட்டது.சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா சென்று, திரும்புவதற்கான கட்டணம் 58 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 கோடி). சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஒரு இரவு தங்குவதற்கு 35,000 டாலர்கள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 நாட்கள் கொண்ட இந்த பயணத்தில் அமெரிக்கர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டினரும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

விண்வெளி ஆய்வு மையத்திற்கு விஞ்ஞானிகள் செல்ல ரஷ்ய ராக்கெட்டுகளையே நாசா பயன் படுத்தி வந்தது. இந்த ஒப்பந்தம் 2011 ம் ஆண்டுடன் முடிந்து விட்டது. இதனையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம் போட்டுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பராமரிக்கவும், 2024 ல் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கும் அதிகமான தொகை செலவழிக்கப்படுவதால், தனியார் நிறுவன வர்த்தகத்திற்கு நாசா அனுமதி அளித்துள்ளது.

விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்வதற்கு ஆண்டுக்கு 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். விண்வெளி மையத்திற்கு சுற்றுலா செல்ல விண்ணப்பிப்பவர்களுக்கு நாசா பல ஆண்டுகளுக்கு முன்பே அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து 2001 ல் கலிபோர்னியாவை சேர்ந்த தொழிலதிபர் டேனிஸ் டிடு முதல் ஆளாக விண்ணப்பித்தார். அதனைத் தொடர்ந்து பலரும் விண்ணப்பித்துள்ளனர்.

Related posts

Leave a Comment