நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்

பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நடிகரை பற்றி புகழ்ந்து சொல்ல அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் தான் ‘Boy Next Door”. அவர்கள் மக்கள் மத்தியில் ஒருவராக அடையாளம் காணப்படும் ஒரு மந்திரத்தை கொண்டிருப்பர், ஆனால் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படக்குழுவில் உள்ள அத்தனை பேருமே “நம்ம வீட்டு பசங்க” என்ற அடைமொழிக்கு ஏற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் சின்னத்திரை மற்றும் Youtube என இரண்டிலும் தங்களது பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவையால் பிரபலமானவர்கள். உண்மையில், இது தான் படத்திற்கு மிகப்பெரிய எனர்ஜியை மக்களிடையே உருவாக்குகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ரசிகர்கள் படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளார்.

இந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இது குறித்து கூறும்போது, “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான தருணங்கள் கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு நாளும் இந்த படத்தை விரும்பி, ரசித்து உருவாக்கியிருந்தோம், மொத்த குழுவுக்கும் அதே அனுபவம் தான் இருந்தது. இந்த திரைப்படம் ஒரு நல்ல கருத்தை தாங்கிய ஒரு நையாண்டி படம். சிவகார்த்திகேயன் அண்ணாவிடம் இந்த ஸ்கிரிப்ட்டை விவரிக்கும்போது, அவருக்கு கதை பிடிக்குமா? படத்தை தயாரிப்பாரா? என நான் சற்று சந்தேகத்திற்குள்ளானேன். ஆனால் அவர் கதையை மிகவும் ரசித்து கேட்டது, படத்தை மிகச்சிறப்பாக தர வேண்டும் என்ற நம்பிக்கையும் பொறுப்பையும் எனக்கு கொடுத்தது. படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த பிறகு அவர் சொன்ன நேர்மறையான கருத்துகள் எனக்கு மன நிம்மதியை அளித்திருக்கிறது” என்றார்.

மேலும் நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “அவர்களை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை, அவர்கள் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் சேட்டிலைட் சேனல்களில் சாதித்து பிரபலங்களாக இருக்கிறார்கள். ரியோ மிகுந்த அர்ப்பணிப்பு உடைய ஒரு நடிகர். தொடர்ந்து அவரது நடிப்பை மெறுகேற்றி வருகிறார். ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து படத்துக்கு கூடுதல் ஈர்ப்பாக இருக்கிறார். படம் முழுக்க தோன்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மொழி தடைகளையும் தாண்டி ஷிரின் காஞ்ச்வாலா நடிப்பில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். நாஞ்சில் சம்பத் சார் அவரின் ஆளுமையால் நிச்சயமாக அனைத்து படங்களிலும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார். இந்த படம் ஒரு ஜாலியான பயணம் என்பதையும் தாண்டி உணர்ச்சி பூர்வமானது. ஏனெனில் இயக்குனர் ஆகும் எனது நீண்டகால கனவு இந்த படத்தில் தான் நனவாகி இருக்கிறது” என்றார்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஷபீர் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Related posts

Leave a Comment