* வெட்டி பசங்க * படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது.
ரேகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் வெட்டி பசங்க திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட்
‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது
முரளி ராமசாமி பேசும்போது,
தயாரிப்பாளர் இப்படத்தை தன்னுடைய சொந்த செலவில் வெளியிடவுள்ளார். ஆர்.வி.உதயகுமார் கூறியதுபோல சங்கத்தில் இருப்பவர்கள் இங்கு இருக்கிறோம். ஆகையால், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு இப்படத்தை வெளியிட சங்கம் உதவி செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
‘போஸ்‘ வெங்கட் பேசும்போது,
‘வெட்டி பசங்க‘ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். விருதுகள் பெற்று, சிறந்த விமர்சனங்களைப் பெற்று மக்களிடையே என் படம் சென்றடையவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. சிறிய படங்களுக்கு ஆதரவு தருவோம் என்று சொல்வதைவிட செயல்வடிவில் செய்தால் தான் அப்படம் வெற்றியடையும்.
மஸ்தான் என்னுடைய குடும்ப நண்பர்.
பி.ஆர்.ஓ பிரியா இன்று முதல் என்னுடைய தங்கையாக ஏற்றுக் கொள்கிறேன். விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்றார்.
இசையாமைப்பாளர் அம்ரிஷ் பேசும்போது,
கடந்த வருடம் எல்லோருக்கும் கஷ்டம் கொடுத்தது. நிறைய இழப்புகளை சந்தித்திருப்போம். நான் எனது தந்தையை இழந்தேன். மாஸ்டர் திரையரங்குகளில் நுழைந்ததும் கொரோனா வெளியே சென்று விட்டது.
ஒரு படம் இரண்டு படம் இசையமைத்து விட்டாலே நாங்கள் தாமதமாக வருவோம். ஆனால் மலையாளத்தில் இத்தனைப் படங்களுக்கு இசையமைத்து விட்டு மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கும் இசையமைப்பாளர் வி.தஷியை வாழ்த்துகிறேன். அவரை நான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வேன் என்றார்.
தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன், இப்படத்திற்காக பலரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.
நடிகர் மஹேந்திரன், மேடையில் என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கொரோனாவிற்கு பிறகு இது என்னுடைய முதல் மேடை. ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. அனைவரும் கூறியதுபோல, நடிகர் விஜய்சேதுபதி யார் மனதையும் புண்படும்படி பேச மாட்டார். கேக் வெட்டிய சர்ச்சையில் அவர் இங்கு இருந்திருந்தால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டிருப்பார். அவருக்கு பதிலாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.
ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,
கொரோனா காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றியது சினிமா மட்டும் தான் என்பதை நான் உறுதியாக சொல்வேன். எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை, அத்தனை தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிட்டதற்காக நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சாவு வீட்டில் குத்துப் பாட்டு போட்டவர் இப்படத்தின் இயக்குநராக மட்டும்தான் இருக்க முடியும். இப்படம் அறுசுவையும் சேர்ந்து கலந்து கொடுத்திருக்கிறார் என்று நம்புகிறேன்.
பொருளாதார ரீதியிலும் வெற்றி ரீதியிலும் இப்படம் வெற்றிப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
பி.ஆர்.ஓ. விஜயமுரளி, தயாரிப்பாருக்கேற்ற இயக்குநராக இருக்கிறார் மஸ்தான். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,
கடந்த 10 மாதங்களாக மக்கள் அனைவரும் அஞ்சி அஞ்சி வாழ்ந்தார்கள். ஆனால், இந்த 16ஆம் தேதி முதல் முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். இதற்காக தமிழக அரசுக்கு மாபெரும் நன்றி.
இப்படத்தின் இசை நன்றாக இருக்கிறது. கதையை சுருக்கமாக கூறியிருக்கிறார்கள். இயக்குநர் மஸ்தான் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மாஸ்தான் என்று போற்றப்படும் அளவிற்கு மாஸான இயக்குநராக வருவார்.
கதாநாயகி மற்றும் கதாநாயகி இருவரும் நன்றாக இருக்கிறார்கள். புதுமுகத்திற்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை. எந்த படமாக இருந்தாலும், பட்ஜெட் போட்டு எடுத்தால் 25 நாட்களுக்குள் முடித்துவிடலாம். அதற்கு உதாரணம் இயக்குநர் ராம நாராயணன். அவர் 25 நாட்களில் படத்தை முடித்துவிடுவார். 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடும். ஆகவே, சிறுபட தயாரிப்பாளர்கள் மற்றும் புதுமுக இயக்குநர்கள் ராம நாராயணனை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தயாரிப்பாளர்களுக்கு செலவுகளைக் குறைக்க வேண்டும். நாயகர்களுக்கு அளவான சம்பளம் கொடுக்க வேண்டும். தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு அளவிற்கு அதிகமான சம்பளம் கொடுக்கப்படுகிறது.
கவிஞர் சினேகன் பேசும்போது,
மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றிருக்கிறது. ஒரு சினிமா வெற்றியடைந்தால் ஒரு குடும்பம் சந்தோசமாக இருக்கிறது. ஒரு படம் தோல்வியடைந்தால் ஒரு குடும்பம் கஷ்டப்படுகிறது. ஒரு படத்தை நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது. வெளியே தெரியாமல் பல தொழில்நுட்ப கலைஞர்கள் இருக்கிறார்கள்.
அவரவர் சமூக தளங்களில் இப்படத்தைப் பற்றி பதிவு செய்து வையுங்கள் என்றார்.
‘ஜாகுவார்’ தங்கம் பேசும்போது
இயக்குநர் மஸ்தானை எனக்கு நீண்ட காலமாக தெரியும்.
நான் ஒரு பக்கம் சண்டைப்பயிற்சி செய்துக் கொண்டிருப்பேன், மஸ்தான் ஒரு பக்கம் நடன பயிற்சி செய்துக் கொண்டிருப்பார்.
மது அருந்தும் காட்சியை திரைப்படத்தில் வைக்காதீர்கள். என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்-ன் பிறந்தநாள். அவர் போன்ற ஒரு மனிதர் யாருமில்லை.
கதாநாயகன் நன்றாக நடித்திருக்கிறார். அவர் வெற்றி நாயகனாக வலம் வர வாழ்த்துக்கள். கதாநாயகி நன்றாக இருக்கிறார். அவரது உடம்பை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
தயாரிப்பாளர் வாராஹி பேசும்போது,
ஒரு தயாரிப்பாளரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதை மஸ்தானிடம் கற்றுக் கொள்ள வேண்டும். சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை கூற வேண்டிய கட்டாயத்தில் சினிமா இருக்கிறது.
திரையரங்குகள் அதிக கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. மக்களின் நலனைக் கருதி 50% மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றார்.
நடிகர் அப்புக்குட்டி பேசும்போது,
இப்படத்தில் எனது கதாபாத்திரத்தை கூறியதும் மிகவும் பிடித்து விட்டது. இப்படம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
சிறிய படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள். ஆனால், அதைவிட திரையரங்குகளின் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் சிறிய படங்கள் வெற்றியடையும் என்றார்.
கதாநாயகன் வித்யூத் விஜய் பேசும்போது,
எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் மஸ்தானிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். அப்புக்குட்டியுடன் பணியாற்றும் போது பல விஷயங்களை கற்று கொடுத்தார் என்றார்.
கதாநாயகி கௌஷிகா, வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.
தயாரிப்பாளர் சக்ரவர்த்தி, இப்படம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்திய சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் வேலு பேசும்போது
இப்படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி. அவர் ஒரு நாள் கூட படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததில்லை. அதேபோல், ஒரு நாள் கூட சம்பளம் தவறியதில்லை என்றார்.
‘வெட்டி பசங்க‘ இசை வெளியீட்டு விழாவின் இறுதியில் இப்படத்தின் இசைத்தகடு வெளியிடப்பட்டது.